வெயில் மண்டையைப் பிளக்கும் மதிய வேளையில் மூச்சிரைக்க ஓடினாள் வேதி(கா). இதயம் வெளியே வந்து விழுந்துவிடுவதைப் போல் படபடவென்று துடிக்கும் ஓசை காதுகளில் ஒலித்தது . மெல்லிய இளங் காற்று அந்த வயல் வரப்புக்களில் வீசிக் கொண்டிருந்தாலும் வேதியின் முகத்தில் வியர்வை வழிந்தோடியது .
வேதியின் முன்னால் இரண்டு பெண்கள் ஓடிக்கொண்டிருந்தனர். சீக்கிரம் வாடி வேதி.... அவன் வர்றான்.... என்று இவளைப் பார்த்துக் கூவினர் அந்தப் பெண்கள். பயம் கலந்த பீதியுடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள். அய்யய்யோ.... என்ற வேதி, வேகமா வா என்பது போல் தன் பின்னால் வந்து கொண்டிருந்த தன் தங்கை ரித்தி(கா )விடம் கையை ஆட்டினாள். அவளின் ஓட்டத்தின் வேகம் பன் மடங்கு கூடியது.
சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு கனவு கலைந்து கண் முழித்தாள் வேதி. "என்ன ஒரு கனவு!?" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். நன்றாகவே விடிந்திருந்தது . அவசர அவசரமாக எழுந்து அறை குறையாக பல் தேய்த்துவிட்டு வந்தாள்.
அம்மா.....எத்தனை மணிக்கு அத்தை வருவாங்க? என்று கேட்டாள்.
"இப்பதாண்டி விடுஞ்சிருக்கு... மத்தியானத்துக்கு மேல வருவாங்க", என்றாள் அம்மா.
ஒ....என்று உற்சாகம் இழந்து போய் அமர்ந்தாள் .
முழு ஆண்டு விடுமுறை ஆரம்பித்து பத்து நாட்களே ஆகியிருந்தது. வழக்கமாக அம்மா வழி பாட்டி வீட்டில் தங்கி சித்தி பிள்ளைகளுடன் விளையாடும் வேதி இம்முறை தன் வீட்டிலேயே இருந்தாள். காரணம் அத்தை ஊரிலிருந்து வருவதாக இருந்தது. அப்பா வழிப் பாட்டியும், இரண்டு சித்தப்பாக்களும் இவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்தனர். ஒருவழியாக மதியம் வந்தது அத்தையும் வந்தார்கள்!!! இரவு வரை அத்தை பெண்களுடன் கதை பேசி, விளையாடி அசதியில் அனைவரும் ஒன்றாகவே உறங்கினர்.
அடுத்த சில நாட்கள் மின்னல் வேகத்தில் பறந்தது. மனதில் வைத்திருந்த அனைத்து விளையாட்டுக்களும் அத்தை பிள்ளைகளுடன் விளையாடி முடித்தாகிவிட்டது. நாட்கள் செல்லச் செல்ல சேட்டைகள் அதிகமாகிக் கொண்டே போயின. ஒருநாள் மருதாணி என்று ஏதோ ஒரு இலையை வைத்து அரைத்து அம்மிக்கல்லை பாழாக்கினர். மறுதினம் பக்கத்து வீட்டு தாத்தாவின் பூனைக் குட்டியை வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்து வளர்ப்போம் என்று பிடிவாதம் செய்து வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டனர். பாட்டியின் மாங்காய் ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு வீட்டிற்கும் பாத்ரூமிற்குமாக அலைந்து ஒருநாள் கழிந்தது.
அன்று காலை அனைவருமாக ஒரு முடிவுக்கு வந்தனர். பாட்டியிடம் சென்று, "போரடிக்குது பாட்டி... பெரிய தோப்புக்கு போயிட்டு வர்றோம்" என்றனர். "அவ்வளவு தூரம் தனியாவா?! வேண்டாம்" என்றாள் பாட்டி. "பத்து நிமிஷத்தில போயிறலாம் பாட்டி" என்று அடம் பிடித்து அனுமதி வாங்கினர். "அப்பிடியே அங்க இருக்கிற தோப்புக்கார தாத்தா
( watch man) கிட்ட மோட்டார் போடச் சொல்லி குளிச்சிட்டு வாங்க" என்று பாட்டியும், "துணியெல்லாம் தொவச்சிட்டு வந்திடுங்க" என்று அத்தையும் கூறி அனுமதி வழங்கினர். "சீக்கிரம் வந்திருங்க யாராச்சும் கடத்திட்டு போயிடப் போறாங்க" என்று பயமுறுத்த முயன்றனர்.
தோப்பிற்குள் உற்சாகமாக நுழைந்த குழந்தைகள் தண்ணீரில் குதித்து ஆட்டம் போட்டனர். சோப்பு நுரைகளில் விளையாடியபடி துணிகளை துவைத்தனர். கால்வாயில் மீன் பிடித்தனர். பட்டாம்பூச்சி பிடித்தனர். வரப்பு ஓரத்தில் ஊரும் ரயில் பூச்சியின் முதுகில் இலைகளை ஏற்றி அழகு பார்த்தனர். நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வெயில் மண்டையைப் பிளந்தது. வாட்ச்மேன் தாத்தாவும் சாப்பிட வீட்டிற்கு போய் விட்டார். ஆள் அரவமே இல்லை. ஒரு இளைஞன் மட்டும் குளித்துவிட்டு வந்தான். இவர்களின் உடை, தொப்பி, கையில் இருக்கும் தூண்டில் போன்றவற்றை ஓரிரு நிமிடங்கள் நோட்டமிட்ட அவன் பழகியவன் போல் பேச ஆரம்பித்தான். "வீட்டுக்குதான போறிங்க?... வாங்க கூட்டிட்டு போறேன்" என்றான். பாட்டியின் எச்சரிக்கை அனைவரின் காதுகளிலும் கேட்டது. "வாங்க..போயிரலாம் " என்று ஓட்டம் பிடித்தார்கள் . நண்டு சிண்டுகள் எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் இவர்களைப் பின் தொடர்ந்தனர்.
"ஏய் ....நில்லுங்க ....ஓடாதிங்க" என்றவாறு சற்று வேகமாக அவர்களைப் பின் தொடர்ந்தான் அந்த வாலிபன். "இந்த பக்கம் வழி இல்ல வேலி போட்டிருக்கு" என்றான். இவர்களின் ஓட்டம் மேலும் அதிகரித்தது. வயதில் மிகவும் இளையவளான ரித்தியால் ஈடுகொடுக்க முடியவில்லை. அம்மா..என்று வயல் வரப்பில் தடுக்கி விழுந்தாள். அவளை தூக்கி விட்ட வேதி " நீ முன்னால போ " என்று அவளுக்கு பின்னாள் போனாள். கனவு பலித்து விட்டதே என்று நினைத்தாள்.
இதற்கு மேல் வேதியாலும் ஓடமுடியவில்லை. தலை சுற்றுவது போல் இருந்தது. கண்களெல்லாம் இருட்டிக்கொண்டு வந்தன . ஓட்டத்தால வெய்யிலாலா என்று தெரியவில்லை. அந்த இளைஞன் கிட்ட தட்ட அவர்களை நெருங்கிவிட்டான். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
"ஏன் இப்படி ஒடுறீங்க? எனக்கு உங்க பாட்டிய நல்லாவே தெரியும்" என்றான். வேதியின் அப்பா பெயர் கூறி, அவர் பொண்ணு தானே நீ? என்று
வினவினான்.
அப்போது..
"ஏய் வேதி, ரித்தி இந்த வரப்பு வழியா போனா சீக்கிரம் வீட்டுக்கு போகலாம் ஓடி வாங்கடி" என்று அத்தைப் பிள்ளைகள் அலறினர். பிய்ந்த வேலியின் கீழிருந்து நுழைந்து வரப்பு வழியாக தப்பி ஓடினர். அந்த இளைஞனால் நுழைய முடிய வில்லை. சிரித்த படி தலையை ஆட்டிக் கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
வரப்பு முழுவதும் பூக்கள் நிறைந்திருந்தது. கால் வைத்து நடக்க முயன்ற போது முள்ளாகக் குத்தியது. திரும்பிப் பார்த்தனர் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். நம்ம கடத்திட்டு போகத்தான் நிக்கிறான் போல என்று அத்தைப் பெண்ணில் பெரியவள் கூறினாள். வேறு வழியில்லாமல் முள்ளின் மேல் ஓடி ஒருவழியாக வீட்டை அடைந்தனர்.வெளியே சைக்கிள் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் மேல் இவர்களின் வாளி.. துவைத்த துணிகளை எடுத்து வரவில்லை என்று அப்போதுதான் உரைத்தது.
"ஏம் பிள்ளைகளா இப்பிடி ஓடிவறீங்க?" அம்மா கேட்டாள். ஒண்ணுமில்லை என்றனர். முன்னறையில் அதே இளைஞன் பெஞ்சில் அமர்ந்து காபி அருந்தி கொண்டிருந்தான். "சித்தப்பாவோட தோஸ்து ஞாபகம் இருக்கா?" என்று அம்மா கேட்டாள். "கூப்ட கூப்ட கேக்காம ஓடுதுங்க..." என்று அவன் கூறினான். அவனை முறைத்த படி உள்ளே சென்ற தோழிகள் விழுந்து விழுந்து சிரித்தனர். முள் குத்திய வலியையும் மறந்து!!!.
Beautifully narrated
ReplyDeletehttp://lateralplane.blogspot.com
Thanks....Glad U liked it...
Delete