Wednesday, May 27, 2015

முதல் ...... முதலாய்.....

                        அன்று வீடே  அல்லோல கல்லோல பட்டுக் கொண்டிருந்தது. அம்மா பஜ்ஜி,சொஜ்ஜி சுடும் சமையல் வேலையில் மும்முரமாயிருந்தாள். அப்பா கடையில் வாங்க வேண்டிய  சாமான்களின் பட்டியலோடு வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார். தம்பியும், தங்கையும் பம்பரமாக சுழன்று வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். எதற்கு ?!?!  அந்த வீட்டுப்  பெண்ணை முதல் முதலாக பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் மாலையில் வருவதாக இருந்தது மாப்பிள்ளையுடன்!!!... அதற்காகத்தான்!!!


                 இப்படியெல்லாம் எங்கள் வீட்டில் எதுவுமே நடக்கவில்லை. நடந்தது என்ன ?!?!?!

                   டெலிபோன் விடாமல் சினுங்கியது. இவ்வளவு காலையிலே யாரு போன் பண்றது ?!?! சொல்லிக் கொண்டே அப்பா போனை எடுத்தார். சித்தப்பா தான் பேசினார். நேரடியாக விஷயத்துக்கே வந்தார். நம்ம பொண்ணோட ஜாதகம்  பொருந்தி இருக்கு....மாப்பிளை வந்ததும் பொண்ணு பார்க்க வர்றேன்னு  சொல்லி இருந்தாங்களே  என்று மாப்பிள்ளையின் விவரங்களை கூறினார். 

                 ஆமா ...என்றார் அப்பா. தொடர்ந்தார் சித்தப்பா. மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து  ரெண்டு நாளைக்கு முன்னாடி  வந்துட்டார். இன்னைக்கு காலையில  பொண்ணு பார்க்க வர்றதா அவங்க அம்மா போன் பண்ணி சொன்னாங்க  சந்தோசம் கலந்த பரவசத்துடன் கூறினார் சித்தப்பா.


     இன்னைக்கா? சனி, ஞாயிறுன்னா  வீட்டுக்கு வருவா. இன்னைக்கு  எப்பிடி? என்று இழுத்தார் அப்பா. 

போன் பண்ணி வரச் சொல்லுங்க? என்றார் சித்தப்பா.

             அவகிட்ட போன் இல்ல....office க்கு தான் கூப்படணும்  ஆனா ஒன்பது மணிக்கு மேலதான் OFFICE  தொறப்பாங்க என்றார் அப்பா.

          அனைவரும் சற்று பரவலாக செல் போன் வாங்கத் தொடங்கிய நேரம் அது. நம்மக்கெதுக்கு செல்!?!? என்று நான் வாங்கவில்லை. இரண்டு மூன்று நாளுக்கொரு முறை நானே வீட்டிற்கு போன் செய்வதுண்டு.

                என்னன்னே  நீங்க ? அவங்க அம்மா  மூணு நாலு பொண்ணுங்களை  short லிஸ்ட்  பண்ணி இருக்காங்க. நான்தான்  நம்ம பொண்ண மொதல்ல பாக்கட்டும்னு சொன்னேன். நம்ம பொண்ணோட போட்டோ பாத்து புடிச்சதாலே அவங்களும் சரின்னு சொல்லியிருக்காங்க. நீங்க என்னன்னா.... இப்பிடி பேசுறீங்களே?!?! டென்ஷன் ஆனார் சித்தப்பா.

           அடுத்த பஸ்ஸில் அப்பா கிளம்பிவிட்டார் என்னை அழைத்துவர.....


         வீட்டிலிருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவில் அலுவலகம் இருந்தது. நான் எப்பொழுதும் போல அலுவலக பஸ்ஸிற்காக காத்திருந்தேன். பஸ்ஸில் ஏறி அமர்ந்த மறு கணமே யாரோ என் பேரைச் சொல்லி உங்க அப்பா வந்துருக்காங்க....என்றனர். எங்க அப்பாவா?!?! குழப்பத்துடன் கீழே இறங்க அப்பா நின்று கொண்டிருந்தார். என்னப்பா?  என்னாச்சு? அம்மாவுக்கு உடம்புக்கு முடியலையா?!? என்றேன் கவலையுடன்.    

     அங்கிருந்து  நான் தங்கியிருந்த அறைக்குச்  செல்லும் வழியில் நடந்ததை விரிவாகக் கூறினார் அப்பா. சாய்ங்காலம்  பொண்ணை  காமிச்சிறலாம்ன்னு சித்தப்பாவை சமாதானப்படுத்திருக்கேன்  என்றார் பயணக் களைப்புடன். 

                டைம் டேபிள் போட்டுட்டு பொண்ணு பாக்குறாரா மாப்பிள்ளை??  என்று  கேலி செய்தாலும் அப்பாவை இப்படி அலையவிற்றாங்களே என்று கோபமாக வந்தது. மாப்பிளைக்கு என்னை பிடிக்கக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டேன். 

           வீட்டிற்கு வந்ததும் ஒரு மாப்பிள்ளை போட்டோவை அப்பா காட்டினார்.

          அய்யய்யோ நல்லாவே இல்லையே...  இவரா இன்னைக்கு வர்றாரு என்றேன் நான்.

இல்ல...இந்த போட்டோ புரோக்கர்  குடுத்தது  என்றாள்  அம்மா.

சனிக்கிழமை பொண்ணு பாக்க வரலாமான்னு கேட்ருக்காங்க தொடர்ந்தாள் அம்மா.  என்னக்கு பிடிக்கல வேண்டாம்  என்றேன். 

அப்பா எதிர்பாராத விதமாக கோபத்தில்  திட்டத் தொடங்கி விட்டார். எதுக்கு பிடிக்கல? என்ன கொறச்சல்? என்றார்.

என்னமோ பாத்த உடனே புடிக்கலே...என்றேன்.

           போட்டோ மட்டும்  பாத்து  பிடிக்கலை பாக்க வரவேண்டாம்னா என்ன அர்த்தம்?...மனசுல ஹீரோயின்னு  நெனப்பு  உன்  பொண்ணுக்கு என்று அம்மாவுக்கும் சேர்த்து கிடைத்தது வசவு. நேர்ல பாத்தாதானே எப்படி இருக்கார்ன்னு தெரியும் என்றார். சனிக்கிழமை வரட்டும் என்றார். எனக்கு அழுகையுடன் அப்பாவின் மேல் கோபமும்   பீறிட்டுக்கொண்டு வந்தது. 

            முதல்ல இன்னைக்கு நடக்குறதப் பார்ப்போம் அம்மா சமாதானம் கூறினாள். சும்மா அழுகாத...முகமெல்லாம்  வீங்கிரும் அப்புறம் சாயந்திரம் நல்லா இருக்காது என்றாள். அப்பா கோவப் படுவார் ஆனா நமக்கு பிடிக்காத எதையும்  செய்ய மாட்டார் என்று தங்கையும் எனக்கு ஆறுதல் கூறினாள்.

               அன்று  வழக்கத்துக்கும் மாறாக வீடு அமைதியாக இருந்தது. அம்மா கடையிலிருந்து வாங்கவேண்டிய  பொருட்களின் பட்டியலை தயார் செய்து கொண்டிருந்தாள். அப்பா அசதி காரணமாக கண் அயர்ந்து விட்டார். பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் இல்லியா? என்று தம்பி கேட்க, இப்பல்லாம் ஸ்வீட், காரம்  என்று கடையில் தான் வாங்குகிறார்கள்  என்று அம்மா சொல்லி கொண்டிருந்தாள். நான் முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.  ஹாலில் இருக்கும் ஷெல்ப்பை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் தங்கை.

             கடிகாரம் ஐந்து அடித்தது. நானும் என் தங்கையும் புடவையுடன் போராடிக் கொண்டிருந்தோம். அம்மா கையில்  ஒரு பெரிய  தோடுடன் வந்தாள். இத போட்டுக்கிட்டு சீக்கிரம்  ரெடி ஆகுடி என்றாள். அப்பா வெளியில் சென்றிருந்தார். 

                             சுடிதார் போட்டா பத்தாதா? அவங்க என்ன வேட்டியா கட்டிட்டு வரப்போறாங்க  என்று  என் கோபத்தை புடவையிடம்  காண்பித்தேன். தோடு வேறு காதில் நுழைவேனா என்று என்னைப்போலவே அடம் பிடித்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அழுகாதடி  என்றாள் தங்கை. இதுக்கு போய் அழுவியா?  என்று  உண்மையான காரணத்தை அறியாத தம்பி கிண்டலடித்தான். 

           நேரமும் ஆனது....மாப்பிள்ளையும் வந்தார். முதல் பார்வையிலே பிடித்துவிட்டது. சோகமும் அழுகையும் தொலைந்து விட்டது. நன்றாகப்  பேசினார். பெரிய குடும்பத்திலே வளந்திருக்கீங்க.... U.S ல வந்து தனியா இருந்திருவீங்களா? என்றார். ம்ம்ம்ம்  என்று பெரிதாக தலை ஆட்டி வைத்தேன் வெட்கம் கலந்த புன்னகையுடன். வீட்டிற்கு போய் போன் பண்றோம் என்று கிளம்பி விட்டனர். காலையிலே ஒரு பொண்னை  பாத்துட்டாங்க....என்று சித்தப்பா அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

                    விடுங்க சித்தப்பா....பிடிச்சா சொல்லுவாங்க முதல்ல பாக்காட்டி என்ன? என்று கூறினேன் ஆனால் சனிக் கிழமை வரப்போகும்  போட்டோ மாப்பிள்ளையை  நினைத்து மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. மறுதினமே பெண் பிடித்து விட்டது என்று பதிலும்  வந்து விட்டது. உறவினர்களிடம் காட்டுவதற்காக  ஒரு போட்டோவை கொடுத்து அனுப்பினார்கள். மாப்பிளை சுமார்தான்...உனக்கு பிடிச்சிருக்கா?!?! என்று போட்டோவைப்  பார்த்தவாறு சித்தி கேட்டார். ம்ம்ம் நேர்ல நல்லா இருந்தாங்க என்றேன் மனதில் அப்பாவை நினைத்தவாறு ....முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் ஒன்று  என்ற பாடல் எங்கோ தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.


                 திருமணமாகி  ஒன்பது வருடங்கள் ஆகப்போகிறது.  அந்த மாப்பிள்ளைக்கு பயந்து தான் உங்களுக்கு O.K  சொன்னேன். உங்க போட்டோவை மட்டும் நான் முதல்ல பாத்திருந்தேன் அவ்வளவுதான்  என்று நான் கூற , நீ நேர்ல சுமார் தான் ஆனா முதல்ல  போட்டோ- ல பார்த்த ஒடனே புடிச்சிருந்திருச்சு  அதனால தான் நானும் O.K  சொன்னேன் என்று அவரும் இன்று வரை இதைப் பற்றிப்  பேசி சிரித்துக் கொண்டிருக்கிறோம். இன்று  எங்களிடையே இல்லாத சித்தப்பாவையும் நன்றியோடு நினைக்கத் தவறுவதில்லை.

            கடைசியாக உங்களிடம் ஒரு கேள்வி? ஒருவரைப் பார்த்தவுடன் ஏற்படும்   " FIRST IMPRESSION" - முதன்  முதலில் மனதில் தோன்றும் எண்ணங்கள் முக்கியமா ? அதை அடிப்படையாக வைத்து  முடிவுகளை எடுப்பது சரியா?!?!? உங்கள் அனுபவம் என்ன?!?!




                         
    
        



   



1 comment:

  1. Nice post.
    I think in an arranged marriage setup, after all research by families is done, first impression and intuition is important. The ability to judge someone is crucial.
    Fortunately, my gut feeling was right when I chose my partner.

    Now when I think about it, I was in early 20s when i got married. I don't think i was experienced enough with judging people. Over the time, i have acquired that skill and many times I am able to identify my close friends quick enough.

    Now in other context, i doubt if we can make major decisions using the 'first impression'. we need to well research depending on the type of decision.


    ReplyDelete