என்னை பெண் பார்க்க வரும் போது "நீங்க வேலைக்கு போகனும்னு நான் சொல்ல மாட்டேன் ஆனா அது தான் உங்க விருப்பம்னா Work Permit வாங்கிட்டு போகலாம்" என்று அவர் கூறிய போது "அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்லை" என்று வெளியே கூறினாலும் "நாம என்ன உடனே வேலை உலகமெல்லாம் கிடைக்கும் வேலையான கம்ப்யூட்டரா படிச்சிருக்கோம் வெளிநாட்டில் வேலை கிடைக்க" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
திருமணமாகி இந்த பதினைந்து வருடங்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பொழுது கழிந்துவிட்டது இப்பொது அவர்களுக்கு என்னுடைய உதவி அவ்வளவாக தேவைப் படுவதில்லை. அதனால் எனக்கு பொழுது போகவில்லை என்றெல்லாம் இல்லை ஆனால் நண்பர்கள் "என்ன வேலைக்கு Try பண்றீங்களா? ஒர்க் பெர்மிட் வந்துருச்சா? கோர்ஸ் படிக்கிறீங்களா?", "பசங்க High School-க்கு போயிட்டா நம்மளை எதிர் பார்க்க மாட்டாங்க..அப்புறம் உங்களுக்கு தான் Bore அடிக்கும்" என்றெல்லாம் கேட்க/ சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
"வேலைக்குப்போவதற்கும் தயக்கம்..உருப்பிடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேறு" நான் என்று இல்லை நிகழ்காலத்தில் பலரின் நிலைமையும் இது தான்.
நமது பாட்டி காலத்தில் அவர்கள் எந்த வித மறு யோசனையும் இன்றி குடும்பப் பணியை செவ்வனே செய்தார்கள். நமது அம்மா காலத்தில் சிலர் படித்து பட்டம் வாங்கியும் அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் அரை மனதோடு வேலைக்குச் சென்றார்கள். அரக்க பறக்க ஓடி வீட்டு வேலையும் செய்தார்கள். பலர் தையல் தொழிலில் வீட்டிலிருந்தபடியே சம்பாதித்தார்கள்.
இன்றைய யுவதிகளின் நிலையோ வேறு. இவர்களில் கிட்டத்தட்ட பெரும்பாலோனோர் பட்டதாரிகள் அதுவும் பொறியியல் துறையில். பலர் படித்து முடித்து வேலைக்குச் செல்கிறார்கள். திருமணம் ஆனாலும் சிலர் வேலையைத் தொடர்கிறார்கள். சிலர் விட்டு விடுகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் "குழந்தைகளையும் குடும்பத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லையே" என கவலை கொள்கிறார்கள். குடும்பத்திற்காக வேலையை துறந்தவர்கள் "படிச்ச படிப்பு வீணாகுதே..நம்ம அம்மா, பாட்டி மாதிரி படிக்காம இருந்திருந்தா நிம்மதியா வீட்டு வேலையை பாத்துட்டு இருந்திருக்கலாம்" என்று புலம்புகிறார்கள்.
இந்த மன உளைச்சலில் இருந்து வெளி வரவே இன்று பலரும் வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை செய்கிறார்கள் உதாரணமாக "online" வியாபாரம். பெரிதாக லாபம் கிடைக்க சில காலம் பிடிக்கும் என்றாலும் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அதோடு "நாமளும் வேலை பார்க்கிறோம்" என்ற திருப்தியும் "கையில் கிடைக்கும் நேரத்தை உபயோகமான முறையில் செலவிடுகிறோம்" என்ற எண்ணமும் ஒரு விதமான மன நிம்மதியை அவர்களுக்குக் கொடுக்கிறது என்பதை மறுக்க இயலாது.
சிலர் டியூஷன் எடுக்கிறார்கள். Knitting, Crocheting செய்கிறார்கள். பலர் YouTube சேனல் ஆரம்பிக்கிறார்கள். Designer Blouse தைத்து Boutique-ல் கொடுத்து விற்கிறார்கள்.சிறிய அளவில் கேட்டரிங் செய்து கொடுக்கிறார்கள். Beautician வேலை கற்றுக் கொண்டு வீட்டிலிருந்தபடியே பலருக்கும் Eye Brow Threading மட்டுமே செய்து சம்பாதிக்கிறார்கள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இதோ நான் கூட இப்பொது எழுதிக் கொண்டிருப்பதற்கு மறைமுகக் காரணமும் அது தான்!!!
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்து லட்சங்களில் சம்பாதிப்பவர்களுக்கு மேல் கூறிய வேலைகளைக் கண்டால் " அதிக வருமானம் இல்லாத இத்தொழில்களில் நேரத்தை ஏன் விரயம் செய்ய வேண்டும்" என்று தான் தோன்றும் ஆனால் இவை தரும் மன நிம்மதியை அவர்கள் உணர வாய்ப்பில்லை.
இந்தக் கட்டுரையை படிக்கும் உங்களுக்கு "அக்கரைக்கு இக்கரை பச்சை" "ஆத்துல ஒரு கால்..சேத்துல ஒரு கால்" "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" போன்ற பல பொன் மொழிகள் நினைவிற்கு வரலாம் ஆனால் அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு கடிவாளம் இல்லாத இரட்டைக் குதிரையில் பயணம் செய்யும் இந்த நவ யுவதிகள் தங்கள் இலக்கை தங்கு தடையின்றி சென்றடைய வாழ்த்துவோமே!!!
பின் குறிப்பு : பொருளாதார தேவைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்கள் எந்த காலத்திலும் வேலைக்குச் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் அங்கே இல்லை.
Super Bei🤝
ReplyDeleteWhat we feel Exactly you wrote in words...thanks bhavi
ReplyDelete