Monday, December 21, 2015

சொல்ல மறந்த வரலாறு

"பள்ளி, கல்லூரிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த, உங்கள் மனதைக் கவர்ந்த பாடம் (Subject ) எது?" என்று கேட்டால் பல பேர் கூறும் பதில் கணிதம் அல்லது அறிவியல் என்பதாகத் தான் இருக்கும். சில பேர் மொழிப்பாடங்களைக் கூடக் கூறுவதுண்டு ஆனால் தப்பித் தவறிக் கூட வாயில் வராத சொல் " சமூக அறிவியல் " என்று அனைவராலும் அன்பாக(?!?!) அழைக்கப் படும் வரலாறு. 

என் பள்ளிக்காலங்களில் மூன்றாம் வகுப்பு முதலே  சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யப் பட்டது. பத்தாம் வகுப்பு வரை  " கட்டாய பாடமாக" கற்பிக்கப் பட்டதே தவிர "கற்றுக் கொள்ளும் " பாடமாக இல்லை என்பதே நிதர்சனம். பல பேருக்கு ஒரு சில " Subject " மேல் ஏற்படும் தணியாத ஆர்வத்திற்கு அதைக் கற்பித்த ஆசிரியர்களே காரணம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படியானால் வரலாற்று ஆசிரியர்கள் சரியாகக் கற்பிப்பதில்லையா?!?!

"நர்சரிப் பள்ளியில்" படித்துக் கொண்டிருந்த என் அண்ணன் ஆறாம் வகுப்பு முதல்  ஆண்கள் பயிலும் உயர் நிலைப் பள்ளிக்கு மாறினான். தனது  ஆசிரியர்களின்  கற்பிக்கும் வழிமுறைகளால் மிகவும் ஈர்கப்பட்டவனானான். தனது வரலாற்று ஆசிரியர் பாடத் தோடு நகைச்சுவை கலந்து   கூறும் பல இணைக் கதைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்வான். வெறுமனே புத்தகத்தை மட்டும் வரலாறு என்று  வாசித்துக் கொண்டிருந்த எங்களுக்கு, நாம்  படித்துக் கொண்டிருப்பது கற்பனைப் கதாபாத்திரங்களைப் பற்றி  அல்ல....நாம் வாழும் இதே நாட்டில் இரத்தமும், சதையுமாக வாழ்ந்து, சாதித்து இறந்து போன உண்மையான மனிதர்களைப் பற்றியது என்ற உணர்வு முதல் முறையாக ஏற்பட்டது.  

எங்களுக்கு   திருமணமாகி நான்  புதிதாக அமெரிக்கா(?!?!)விற்கு வந்த நேரத்தில் "மிஸ் வேர்ல்ட் " போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் போகிற போக்கில் என் கணவரிடம் அமெரிக்கா என்று எதற்கு இத்தனை "Contestants " யை காமிக்கிறாங்க? ஒவ்வொரு "டைம் ஜோன்" க்கு ஒவ்வொருத்தரா?  என்று கிண்டல் கலந்த தொனியில்  கூற என் கணவர் ஆச்சர்யம் கலந்த குழப்பத்துடன் என்னை நோக்கினார். அமெரிக்கா என்பது U.S.A  மட்டும் இல்லை என்றும் வட அமெரிக்கா கண்டம் முழுவதும் என்று விளக்க "இது ஏன் எனக்கு தோன்றவில்லை?!? என்று அவமானமடைந்தேன். அன்று முதல் "கூகுள்" வரைபடத்தை எனது தோழியாக ஆக்கிக் கொண்டேன்.

என் தங்கையிடம் இதே கேள்வியைக் கேட்க அவளின் தெளிவான பதிலைக் கண்டு வியந்தேன். தனது ஒன்பதாவது வகுப்பு ஆசிரியை வாரம் ஒருமுறை தவறாமல் " Map Test " வைப்பார் என்றும் அப்பொழுது கற்றுக் கொண்டதே இன்று வரை கை கொடுப்பதாகக் கூறினாள். எனக்கு ஏற்படும் பல வகையான வரலாற்று, புவியியல்  சந்தேகங்களுக்கு இன்று வரை என் கணவரின் பதிலையே உடனடி நிவாரணமாகக் எடுத்துக் கொள்கிறேன். கல்லூரிக் காலங்களில் அரசுப் பொதுத் தேர்வில் கலந்து கொள்வதற்காகப்  பல வகையான புத்தகங்களைப் படித்ததாலேயே தன்னால் ஓரளவிற்கு பதில் கூற முடிகிறது என்று என் கணவர் கூறுகிறார்.

நம் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் வரலாற்று பாடங்களுக்கு
முக்கியத்துவம் ..... ஏன் சொல்லிக் கொடுப்பதே  இல்லை. " Total Mark " அதிகமா வாங்கணும்னா "மொழிப் பாடங்களைப் படி" என்று கூறுகிறார்களே தவிர யாராவது " சமூக வரலாறு" படி என்கிறார்களா? ஏன் நாம் படிப்பதெல்லாம் மதிப்பெண் வாங்குவதற்கு மட்டும் தானா?!?!...

உயர் நிலைப் படியில் இரண்டு வருடமும் கடிவாளம் கட்டிய குதிரைகளாக நம் குழந்தைகளை மாற்றி விடத் துடிக்கிறோம். குறைந்த பட்சம் நம் மாவட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் விதமான  " ப்ராஜெக்ட் " களை கொடுத்து "Present " செய்யச் சொல்லலாமே?!?! நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அனைவருக்கும் "சத்திய சோதனை " புத்தகம் கொடுக்கப்பட்டு, தேர்வும் வைக்கப் பட்டது. ஆனால் நாங்கள்  யாரும் இருபது பக்கத்தைக் கூட தாண்டவில்லை. எந்த ஆசிரியராலும் படிக்குமாறு நாங்கள் வற்புறுத்தப்படவும் இல்லை!!!

எப்ப பார்த்தாலும் அசோகர் மரத்தை நட்டார், அக்பர் ,பாபர் காலத்து ஆட்சி இதுதானே வரலாறு என்று சலித்துக்கொள்ளும் நம்மில் பலருக்கு அதைப் பற்றியாவது தெளிவாகத் தெரியுமா?!?...."பாரிஸ்" என்றால் நம்ம "பாரிஸ் கார்னர்" தானே? என்றும் "ஓடி விளையாடு பாப்பா" என்று பாடியவர் பாரதிராஜா என்று பேசும்    நகைச்சுவைகளை ரசித்து சிரித்து விட்டு  உண்மையை அறிய மறுக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பள்ளி, கல்லூரி  பாடத்திட்டத்தில் எதாவது வரலாற்று நிகழ்வு  அல்லது சரித்திரத்தில் மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட  மாமனிதர்களைப்  பற்றிய  புத்தகத்தை இணைக்கலாமே?!? இதன் மூலம் படிக்கும் ஆர்வத்தையும், நூலக பயன் பாட்டையும் வளர்க்கலாமே?!?! ஆசிரியர்களுக்கும் இது தொடர்பான
"செமினார்" களுக்கும்  ஏற்பாடு செய்யலாம். வரலாற்று மாணவர்களும், ஆய்வாளர்களும் மட்டும் தான்  படிக்க வேண்டும் என்றில்லாமல் அனைத்து துறை மாணவர்களின் பாடத் திட்டத்திலும் வரலாறு இடம் பெற வழிவகை செய்ய  வேண்டும்.     

அமெரிக்கா, ஐரோப்பாவைப் பற்றிய  வரலாற்று  ஆவணப் படங்கள் இணையத்தில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. மிக தத்ரூபமாக அந்தந்த நூற்றாண்டுகளுக்கே நம்மை அழைத்துத் செல்பவையாக இருக்கின்றன. திரைப்படத் துறையில் நம் இந்தியர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் ஏன் அத்தகைய முயற்சிகளை  செய்யக்கூடாது? அரசு நிதி உதவியோடு "பிரம்மாண்டமாக" எடுக்கப்பட்டு பள்ளிகளில் தொடர்ச்சியாகத்  திரையிடலாமே?!?! நம் வரலாற்றை காட்சிகளாக காண்பதால் நம் மனதில் மிகவும் ஆழமாக பதிய வைக்க முடியும். நம் வரலாற்றுத்  தலைவர்களைப் பற்றி பல திரைப் படங்கள் வெளிவந்திருப்பதை மறுக்க முடியாது ஆனால் பிரபல நடிகர்கள் நடிப்பதால் அவர்களைத் தாண்டி அவர்களின் பாத்திரங்கள் நம் மனதில் பதிய மறுக்கிறதோ?!?!

முடிந்து போனதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறோம்?!? என்று  நீங்கள் கேட்பது புரிகிறது. நம்மோடு இல்லாத நம் பாட்டன், முப்பாட்டன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நாம்  நம் முன்னோடிகளைப் பற்றியும் சாதனையாளர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் பெருமிதம் கொள்ள வேண்டாமா?!? அவர்கள் வாழ்விலும், சரித்திரத்திலும் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் நமக்கு "இன்ஸ்பிரேசன்" ஆகக் கூட மாறலாம். நம்மில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்வேகத்தை தட்டித் திறக்கும் திறவு கோல்கள் பல சரித்திரத்தில் புதைந்து கிடக்கின்றன அவற்றை அறிய வேண்டாமா?!? உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டாமா?!?  குறைந்தபட்சம் வரலாற்று வதந்திகள் பரவுவதையாவது  தடுக்கலாமே!!! "இந்தியா ஒளிர்கிறது",
"டிஜிட்டல் இந்தியா" என்றெல்லாம் முன்னேறும் வேளையில் இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்களை பற்றி  அறிந்து கொள்ளவது அவசியம் என்றே தோன்றுகிறது.

 பெற்றோர்களாகிய  நாம் பல ஆய்வுப்  புத்தகங்களை வாங்கிக் குவிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் வரைபடங்களையாவது வீட்டில் ஒட்டி வையுங்கள். சரித்திரம் கொட்டிக் கிடக்கிறது ஆனால் அதை அறிந்து கொள்ளும் ஆர்வமோ வற்றிக் கிடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.   விமானத்தில் தான் உலகைச்  சுற்றி வர வேண்டும் என்பதில்லை....வரை படத்தில் கூட சுற்றி வரலாம் .... வாருங்கள்!!! 

Thursday, November 5, 2015

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?!?!

   சுவர் கடிகாரம் மாலை ஐந்தரையை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.

        கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ராகேஷை " Daddy" என்று அவனது ஒன்றரை வயது மகனும், ஆறு வயது மகளும் குதூகலத்துடன் வரவேற்றனர். ஷூவைக் கழட்ட விடாமல் காலைக் கட்டிக் கொண்டு நின்ற மகனைத் தூக்கிக் கொண்டு, " Guess What " என்று தனது பள்ளியில் நடந்தவற்றை கூறத் தொடங்கிய  மகளை நோக்கி," அம்மா எங்கடா ? " என்றான் ராகேஷ்.

   என்ன இன்னைக்கி " Traffic " இல்லியா? என்றவாறு உள்ளறையிலிருந்து வெளிப்பட்டாள் நிரூபமா. அவள் கூறியதை காதில் வாங்காதவனாய், "உனக்கு விஷயம் தெரியுமா?" எனக்கு அடுத்த வாரத்திலிருந்து இரண்டு நாள் " Work From Home " கொடுத்திட்டாங்க!!! என்றான் மலர்ந்த முகத்துடன். 

       கடந்த ஆறு மாதங்களாக, " எல்லாரும் வாரத்தில ரெண்டு நாள் தான் ஆபீஸ் போறாங்க. மத்த நாளெல்லாம் வீட்ல இருந்து தான் வேலை பாக்குறாங்க. நீங்க என்னன்னா ஸ்கூல் பயன் மாதிரி டெய்லி ஆபீஸ் போறீங்களே? என்ன பொல்லாத கம்பெனியோ? என்று ராகேஷை நச்சரித்துக் கொண்டிருந்தாள். இன்று அவள் ஆசை நிறை வேறிவிட்டது.

     இனிமேல் அறக்க பறக்க சமைக்கத் தேவையில்லை. மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர (குளிரிலும், மழையிலும்) மகனையும் தூக்கிக் கொண்டு ஓடத் தேவையில்லை. மகனை கணவரிடம் பார்க்கச் சொல்லிவிட்டு குளித்து விட்டு வந்து விடலாம். முக்கியமாக டிராபிக்-ல் தினமும் இரண்டு மணி நேரம் விரயம் ஆவதைத் தடுக்கலாம்.  'ஏய்ய்!!! "நினைச்ச படி...நினைச்சபடி" என்று அவள் மனம் ஆனந்தக் கூத்தாடியது.

        அடுத்து வந்த இரண்டு வாரங்களில் வேலைப் பளு குறைவாக இருந்ததால் மாலை ஐந்து மணிக்கெல்லாம் லேப்டாப்- பை  மூடி வைத்து விட்டான் ராகேஷ். சில நாட்கள் "மால்," சில நாட்களில் கோவில் என்று மாலை வேலைகளில் கிளம்பி விட்டனர். "வீட்ல இருந்து வேலை செஞ்சா அலுப்பு தெரிவதே இல்லை அதனால Gym-க்கு போக ஈசியா இருக்கு" என்றான் ராகேஷ். சொர்கமே என்றாலும் அது work from home போல வருமா!!! என்று அக மகிழ்ந்தனர்  கணவனும் மனைவியும்.

        அன்று எப்பொழுதும் போல் வேலை செய்து கொண்டிருந்த ராகேஷ் திடீரென ," இந்த மேனேஜர் இன்னைக்கு போய் மீட்டிங் செட் செஞ்சுருக்கான் என்றவாறு போனை எடுத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டான்". கதவை தட்டிக் கொண்டு நின்ற மகனை சமாளிப்பதற்குள் நிரூபமாவுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. வழக்கமாக தன் பெற்றோருக்கு போன் செய்யும் நேரம் வேறு  நெருங்கிக் கொண்டிருந்தது ஆனால் ராகேஷிடமிருந்து போன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. முகத்தில் ஏமாற்றம் நிழலாட அமர்திருந்த நிரூபமாவை நோக்கி," ஒரு 30 Min-ல லஞ்ச் ரெடி ஆயிருமா? அப்பறம் full- ஆ மீட்டிங் இருக்கு" என்று கதவை சாத்திக் கொண்டான் ராகேஷ். இன்னும் சமையல் வேலை ஆரம்பிக்கவே இல்லை என்று அப்போதுதான் உரைக்க பரபரப்பானாள்.

       பின்பு வந்த நாட்களில் இதுவே தொடர்கதையானது. "Call- ல இருக்கும் போது  டிவி (Roku) போடாத" இன்டர்நெட் ஸ்லோ ஆயிருது என்று போனோடு சேர்ந்து டிவி-யும் பறிபோனது. சில நாட்களில் இன்டர்நெட் வரவில்லை என்று அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்புவான் ராகேஷ்." அய்யயோ அப்ப Lunch? " என்ற நிரூபமாவை முறைத்தவாறே "ஆபீஸ்- ல சாப்டுக்கறேன் " என்பான். சில சமயம் மாலை ஏழு மணியானாலும் வேலை செய்து கொண்டிருப்பான். மகனோடு சேர்த்து மகளையும்" மெதுவா பேசு அப்பா call-ல இருக்காரு என்று சமாளிக்க வேண்டும்.   

           அன்று அதிசயமாக  " இன்னைக்கு அவ்வளவா வேலை இல்லை" என்று முன் அறையில் சோபா-வில் லேப்டாப்புடன் அமர்ந்து கொண்டான். டிவி- யும் அவன் வசம் சென்றது. சரியாக பார்க்கவில்லை என்று Rewind செய்து செய்து பார்த்தான். பார்த்ததையே திரும்ப திரும்ப  பார்த்து நிரூபமாவிற்கு மண்டை காய்ந்தது. வேலை இருக்குன்னா அதை "Pause" பண்றீங்களா? என்று கோபமடைந்தாள். மகனுடன் உட்கார்ந்து கொண்டிருந்த நிரூபமாவைப் பார்த்து."என்ன சமையல்?" என்றான். எல்லாம் மிச்சம் இருக்கு சாதம் மட்டும் வைக்கணும் என்றவளை அதிர்ச்சியாகப் பார்த்தான். " ஆமா நீங்க எப்ப கெளம்பிவீங்கன்னு தெரியாது அதான் நேத்தே சேத்து  சமைச்சிட்டேன்" என்றாள். ராகேஷ் வீட்டில் இருக்கும் நேரம் சமைக்காமலே சமாளித்தாள்.

        அவன் அமர்ந்திருந்த சோபா அமுத சுரபி போல மாறியது. போன், டிவி ரிமோட், DVD- ரிமோட், snack bowl எதைத் தேடினாலும் அதிலிருந்து கிடைக்கும். டீ- கப், தண்ணீர் குடித்த டம்ளர் அனைத்தும் கீழே அவன் காலடியில் சேவர்கர்களைப்போல் காவலுக்கு நிற்கும். அவன் வீட்டில் இருக்கும் பொழுது இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொண்டது போல் இருந்தது நிரூபமாவிற்கு. 

    "Work from Home" என்றால் work நமக்கு Home அவர்களுக்கு என்றுதான் பொருளோ? என்று நினைத்துக் கொண்டாள்." இதற்குத்தான் ஆசைப் பட்டாயா நிரூபமா?" என்று அசிரிரீ ஒலித்தது. நினைத்தது நடக்கா விட்டால் கவலை, நடந்தாலும் கவலை தானோ?!?! என்று பெரு மூச்செறிந்தாள்  நிரூபமா.   

           ஒரு நாள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பேச்சு வார்த்தையின் முடிவில் போனும், டிவியும் நிரூபமாவின் வசம் வந்தது. ராகேஷ் வீட்டில் இருந்தாலும் அவன் அலுவலகத்தில் இருப்பதைப் போல் நினைத்துக் கொள்ள வேண்டும். மகனைப் பார்த்துக் கொள்ளும் வேலை எல்லாம் அவனிடம் கொடுக்கக் கூடாது. முக்கியமாக தொன தொனவென்று ஊர்க்கதை பேசக் கூடாது  என்று முடிவானது.   

          இப்பொழுதெல்லாம் ராகேஷ் "Call"- என்று ஹெட் போன்-னை காதில் மாட்டிக் கொள்வான். சில நேரம் அதில் பாடல் கேட்டுக் கொண்டிருப்பான். சில நேரம் Face book பார்த்துக் கொண்டிருப்பான். இதை எல்லாம் நிரூபமா கண்டு கொள்வதே இல்லை. High speed இன்டர்நெட் இருப்பதால் வழக்கம் போல் அவள் பெற்றோரிடம் போனில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பாள் சமைத்துக் கொண்டே.

          ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பிய ராகேஷ், "Work From Home" option- ஐ தூக்க போறாங்களாம் என்றான். அப்பிடியா?!?! என்றாள் நிரூபமா  எந்த அலட்டலும் இன்றி!!!  

            

     

      

       

Tuesday, October 6, 2015

பாடவா?!?! பாட...வா

ஒரு பாட்டு பாடுங்களேன்...என்றதும்,

ஐய்யய்யோ...எனக்கு பாட்டு எல்லாம் வராதுங்க.

தொண்டை சரியில்ல...

 lyrics தெரியாது... என்று பல காரணங்கள் கூறினாலும் சும்மா பாடுங்க என்றதும் பலர் வெட்கம் கலந்த புன்னகையுடன் பாட ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும் சிலரும் தனிமையில் பாடி தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்கின்றனர். மகுடிக்கு மயங்கும் பாம்பைப் போல் இசைக்கு நம் மனம் அடிமை ஆகி விடுகிறது. சில பாடல் வரிகளை நாட்கணக்கில் ஏன் வாரக் கணக்கில் கூட முணுமுணுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி என்ன காந்தசக்தி பாடல்களில்(இசை) உள்ளது?

      பாடல்களை நாம் பாடல்களாக மட்டும் கேட்டு, ரசித்து மறந்து விடுவதில்லை. நம் வாழ்க்கைப் பாதையில் நம்மோடு சேர்ந்து பயணிக்கும் மற்றொரு பயணியாக, சிநேகிதியாகப் பார்க்கிறோம். நமக்கு ஏற்படும் பல சுவாரஸ்யமான அனுபவங்களோடு பாடல்களையும் இணைத்து நினைவில் நிறுத்த முயல்கிறோம். நம் இளமைக் காலங்களில் கேட்ட பாடல்களைக் கேட்கும் பொழுது, கடந்த கால நினைவுகளோடு சிறிது நேரம் நாம்  வாழ்ந்து விட்டு வருவதை யாராலும் மறுக்க இயலாது .

 இந்த பாட்டு என்ன ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி வந்திருக்குமா? என்று யாராவது கேட்டு விட்டால் போதும் உடனே,"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, நான் பத்தாவது பரீட்சை எழுதிவிட்டு  வந்தப்போ புதுப் பாடல்ல போட்டாங்க" என்றும், "அந்த பாட்ல வர்ற டிரஸ் கூட எங்கிட்ட இருந்திச்சு" என்றும் அந்த படம் எப்போது வந்தது என்பதை நிரூபிக்க நம் வாழ்க்கைச் சம்பவங்களை சாட்சிக்கு அழைக்கிறோம்.

  அப்போது எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும். 24 மணி நேரமும் முழங்கும் FM-கள் இல்லை. என் அப்பாவிற்கு பாட்டு கேட்டுக் கொண்டே தூங்க ஆசையோ என்னவோ?!? ரேடியோவை ஆன் செய்யலாம் என்றபடி என் விரலையோ என் தங்கையின் விரலையோ பட்டன் போல் தட்டுவார். நாங்கள் பாட ஆரம்பித்து விடுவோம். சிறிது நேரத்தில் volume ஏற்ற இறக்க மற்ற விரல்களை அழுத்துவார், அதற்கேற்றவாறு  பாடுவோம். பின்பு off செய்து விடுவார்.

  சில வருடங்களுக்கு பிறகு ஒரு டேப் ரெகார்டர் வாங்கினோம். அதனோடு இரு ஒலிப் பெருக்கிகளை இணைத்து " Home Theater"- ஐ எங்களுக்கு அறிமுகப் படுத்தினார் என் அப்பா. எ.ஆர். ரஹ்மான் அறிமுகமான காலமது. அவரது அதிரடி இசையால் என் முதல் தம்பி மிகவும் கவரப் பட்டிருந்தான். ஒலிப்பெருக்கியின் அருகில் காதை வைத்துக் கேட்டுக்கொண்டிருப்பான். பின் தட்டு, டம்ளர், ரப்பர் பேண்ட் கொண்டு என் அண்ணனின் உதவியோடு அதே போன்று இசையமைக்கிறேன் என்று ஆரம்பித்து விடுவான். பாடல்களுக்கு இடையிடையே புரியாத மொழியில் வரும்" chores" வார்த்தைகளையும் சேர்த்துப்  பாடுவான். 

  அடுத்த ஐந்து, ஆறு வருடங்களில்  எண்ணிலடங்கா" Cassette" களை வாங்கி குவித்துவிட்டோம். அனைத்திலும் தவறாமால் என் அப்பாவின்  இனிஷியலை எழுதி விடுவாள் என் தங்கை. தொலைந்து விடுமாம்!!! பேருந்தில் கேட்கும்(பிடித்த) பாடல்களை வீட்டிற்கு வந்ததும் ஒரு டைரில் எங்களை குறிக்கச் சொல்வார். பின் கடைக்காரரிடம் பதிவதற்குக் கொடுப்பார். படத்தின் பெயர் தெரியாவிட்டால் பாடிக் காண்பித்ததாக கூறுவார் என் அப்பா. FM- கள், மொபைல் போனில் பாட்டு கேட்கும் வசதியால் எங்கள் காசெட்கள் பல வருடங்களாக பெட்டியில் உறங்குகின்றன. இதையெல்லாம் மீயுசியத்திலும், road show- களிலும் தான் வைக்க வேண்டும் என்று நாங்களே கேலி செய்வதுண்டு!!!

   எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் எங்கள் அத்தை இருந்தார். அவர்களிடம் நாமே பாடி பதிந்து கொள்ளும் வண்ணம் டேப் ரிகார்டர் இருந்தது. ஒருநாள் அத்தை இல்லாத போது நானும் என் தங்கையும் சேர்ந்து பாட்டு புத்தகத்தின் உதவியோடு பாடித் தள்ளிவிட்டோம். வாயாலே அனைத்து பாடல்களுக்கும் என் தம்பி இசை அமைத்தான். புரியாத கோரஸ் பாடவும் அவன் தான். ஆண் குரல்களுக்கு தன் இனிய குரலைத் தந்து உதவினான் என் இரண்டவாது தம்பி. மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட என் சித்தியும் அதில் ஒரு பாடலைப் பாடினார். நடு நடுவே என் சித்திப் பையனின் மழலையும் கேட்கலாம். இருபது வருடங்களுக்குப் பிறகும் இதைக் கேட்டு அவ்வப்போது  ரசிப்பதுண்டு.

  என் இரண்டு சித்தப்பாக்களுக்கும் பாடல்களின் மேல் தணியாத ஆர்வம் இருப்பதை நாங்கள் கவனிக்கத் தவறியதில்லை. "டி. எம். எஸ்" அவர்களின் பாடல்களை கேட்பதில் மட்டுமல்ல, பாடுவதிலும் வல்லவர் என் முதல் சித்தப்பா!!! சமீபத்தில் "எம்.எஸ்.வி" மறைந்த செய்தி கேட்டதும் என் சித்தப்பாவின் கணீர் குரல் தான் என் காதுகளில் ஒலித்தது. என் கணவரிடம் கூட இதைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். 

  "You Tube" ல் இளையராஜா "Play List" கேட்கும் போதெல்லாம், பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வரும்  எனது இரண்டாவது சித்தப்பா, வந்ததும் வராததுமாக கடைசி பாடலையாவது கேட்டு விட மாட்டோமா என்ற ஆர்வத்தில் அவசர அவசரமாக வானொலியை  ஓட விட்டு பாடல்களை ரசிக்கும்  காட்சிகளே என் மனத்திரையில் ஓடும்.    

    நமக்கு பிடித்த பாடல்களைக் கேட்கும் பொழுது மனதில் இருக்கும் களைப்பு, கவலை,அழுத்தம் அனைத்தும்  பறந்து விடுகிறது. தோல்வியைத் தழுவும் பொழுது உற்சாக பானமாக இருந்து, நம் தோள்களைத் தட்டி கொடுப்பதும் பாடல்களே. பல சாதனையாளர்கள் தங்களின் வெற்றிக்கு பாடல்களும் தூண்டு கோலாக இருந்ததாகக் கூறுகின்றனர். தனிமையில் வாழும் பலருக்கும் வாழ்கைத் துணையாக இருப்பதும் பாடல்கள்தான்!!!

    ரேடியோ" Out Dated" ஆகாமல் இருப்பதும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக FM- கள் பல்கிப் பெருகுவதும் பாடல்கள் மேல் நமக்கிருக்கும் தீராத காதலால் தானோ? கவிஞர்கள் மறையலாம், கலைஞர்கள் மறையலாம் ஆனால் பாடல்கள் என்றும் இந்த மண்ணை விட்டும், நாம் வாழும் வரை நம் மனதை விட்டும் மறைவதில்லை. இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான் வாழ முடியவில்லை, இசையோடு இயைந்த வாழ்கையாவது வாழலாமே!!!  
          
    
     

       

Sunday, August 9, 2015

60 வயதினிலே

    பல சமாதானம் கூறியும் கேளாமல் அழுது கொண்டிருக்கும் தன் ஏழு வயது மகளைப் பார்க்கப், பார்க்க கோபம் தலைக்கு ஏறியது நிலாவிற்கு.

இப்ப நிறுத்துறியா? அடி வேணுமா? என்று குரலை உயர்த்தினாள் மகளிடம்.

டூ யூ வான்ட் " டைம் அவுட்" என்று உதவிக்கு வந்தான் கணவன்.

கெஞ்சலும், மிரட்டலும், அதட்டலுமாக தொடர்ந்த போராட்டம் சில நிமிடங்களுக்குப்  பிறகு சமாதானத்தில் முடிவடைந்தது.  

அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்தவாறு கணவரிடம், ஏன் தான் இப்படி படுத்துறாளோ?!?! என்றாள் நிலா.

    நமக்குத்தான் பொறுமை இல்லையா?  நம் பொறுமையை இவதான் சோதிக்கிறாளா? என்று தொடர்ந்தாள். நான் காலேஜ்ல படிக்கும் போது கூட இந்த மாதிரி அழுதிருக்கிறேன் தெரியுமா? ஆனா எங்க அம்மா ஒரு தடவை கூட என்ன திட்டுனது கிடையாது என்றாள்.

     ம்ம்ம்... அவ மூடு சரியில்ல அதனாலதான் என்று  சமாதானம் கூறி விட்டு தூக்கத்தில் ஆழ்ந்தான் கணவன். ஆனால் நிலாவின் எண்ண அலைகளோ  அவளை தூங்க விடாமல் புரட்டிப் போட்டன. அம்மாவின் நினைவுகள் அவளை பின்னோக்கி இழுத்தன!!!

      நிலா ஒன்றும் அம்மா செல்லம் இல்லை. ஐந்து குழந்தைகள் உள்ள வீட்டில் அதற்கான வாய்ப்பும் குறைவு. அம்மா ஐந்து பேருக்கும் தனது அன்பை சரி சமமாகவே பங்கிட்டுக் கொடுத்தாள். தம்பிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததால் தொடக்கப் பள்ளி நாட்களை   பெரும்பாலும் பாட்டி வீட்டிலே கழித்தாள் நிலா. 

     பின்பு வந்த நாட்களில் தான் அம்மாவுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு சேட்டை செய்தாலும் அம்மா திட்ட மாட்டாள். கடும் சொற்களைப்  பிரயோகித்தது இல்லை. ஒழுக்க நடவடிக்கைகள் அப்பாவின் மூலமே எடுக்கப்படும். இதைப் பற்றி அம்மாவிடமே நிலா கேட்டதுண்டு.
அதற்கு, அடிப்பதால் எதையும் சாதிக்க முடியாது என்று கூறி விட்டாள். அப்போது அது பெரிய  விஷயமாகப் படவில்லை ஆனால் அது எவ்வளவு கடினமானது என்று  இப்பொழுதுதானே தெரிகிறது.

    அனைவரையும் சரியான நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கும், அப்பாவை அலுவலகத்திற்கும்  அனுப்புவதில் அம்மாவை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. அப்பாவும் அதற்கு உறுதுணையாக இருந்தார். இதற்காக அம்மா பம்பரமாக சுழல்வாள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை ஆனால்  சரியான நேரத்தில் ஆயத்த வேலைகளை துவக்கி விடுவாள். கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக, அரை குறையாக செய்யும் பழக்கம் அறவே கிடையாது அம்மாவிடம். வீட்டிற்கு விருந்தாளிகள் வரும் வேளைகளில் நிலாவும் அம்மாவின் பாணியையே கடைபிடிக்கத் தொடங்கியிருந்தாள்.   

     நிலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. உறவுக்கார பெண் ஒருவர் அம்மாவிடம் கடுமையாக எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தார். எதையோ விளக்க ஓரிரு முறை முயற்சித்த அம்மா பின்பு மெளனமாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தார். அவர் சென்ற பின்,

எதுக்கும்மா பதிலுக்கு பதில் பேசாம அமைதியாவே இருந்த? கோபத்துடன் வினவினாள் நிலா.

நாம பேசுறத கேக்கற பொறுமை அவங்களுக்கு இல்லை....அவங்க கிட்ட வாக்குவாதம் பண்றதால நமக்கு என்ன கிடைக்கப் போகுது? என்று கூறிவிட்டாள். முக்கியமான பாடம் ஒன்றை அன்று அம்மாவிடம் இருந்து நிலா கற்றுக்கொண்டாள் " வாக்கு வாதத்தில் ஜெயிப்பது முக்கியம் இல்லை, வாழ்க்கையில் ஜெயிப்பதுதான் முக்கியம்" என்பது தான் அது.

   அப்பாவிடமும் இதையே அம்மா பின்பற்றினாள். சண்டை போட்டது கிடையாது. அமைதியான தருணங்களிலே தவறுகளைச் சுட்டிக் காட்டுவாள். தன் மீது பிழை இருக்கும் பட்சத்தில் அதையும்  ஒப்புக் கொள்வாள். குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் பழக்கம் கிடையாது  ...ஆலோசனைகளாகவே தெரிவிப்பாள்.

   பள்ளிக்கு செல்லும் வேளையில் ஒவ்வொருவரும் ஓரிரு வேலைகளை அம்மாவிடம் தந்து விட்டுச் செல்வார்கள். நிலாவின் தாவரவியல் இலைகளை வெய்யிலில் சரியான பதத்திற்கு  உலர்த்தி வைக்க வேண்டும். தம்பியின் தங்க மீன்களுக்கு லஞ்ச் கொடுக்க வேண்டும். மறந்து விட்டால், இதுகூட செய்யாம  என்னம்மா? என்று முறைப்பார்கள். அப்போதும் கோபப் படாமல் அமைதியையே ஆயுதமாக்குவாள். எடுத்துரைக்காமலே அம்மாவின் நிலைமை அனைவருக்கும் புரிந்தது ஆச்சர்யம் தான்!!!

   நிலாவின் பிரசவத்திற்கு வெளிநாடு வந்தபோது அனைவரும், அம்மாவை டெலிவரி ரூமிற்கு கூட்டிட்டு போகாதீங்க... emotional ஆயிடுவாங்க என்றனர். ஆனால் அம்மா தைரியமாக நிலாவிற்கு பக்க பலமாக நின்றாள். லேப்டாப்-ல்  பேப்பர், புத்தகம் படிக்க எளிதில் கற்று நிலாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் அம்மாவின் ஆர்வத்தைக் கண்டு வியந்தாள் நிலா.

   அம்மாவைப் பற்றிய நினைவுகள் நிலாவிற்கு பல  உண்மைகளை  உணர்த்தியது. நிலா தாயாகியிருக்கலாம் ஆனால் அம்மாவாகவில்லை. அதற்கு இன்னும் பக்குவப்பட வேண்டும். என்னிடமிருந்து என் மகள்(ன்) எதையும் கற்றுக் கொள்வதில்லையே என்று  எந்தத் தாயும் கவலைப்படத்  தேவையில்லை. அவர்களுக்கே தெரியாமல் உங்களை கவனித்துக் கொண்டு தான்  இருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்வதற்கும், அம்மாவின் பெருமை புரிவதற்கும் அவர்களுக்கு காலமும், அனுபவமும் தேவை.

           நிலாவின் பார்வையில் அன்று  அம்மா,"36 வயதினிலே" ஜோதிகாவை விட பல மடங்கு சாதனைகள் புரிந்த சாதனைப் பெண்மணியாக மிளிர்ந்தாள். அவை தந்த  மகிழ்ச்சியில்(பெருமிதத்தில்), மனக் கவலைகள் அலைகளில் அடிபட்ட கோபுரமாய் சரிய , எப்போது உறங்கினாள் என்று நிலாவிற்கே தெரியவில்லை!!!     

 

       


Thursday, July 9, 2015

கனவே ....கலையாதே !!!

     கனவு காணும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? நான் கேட்பது அப்துல் கலாம் கூறும் "இலட்சியக் கனவோ", கண்களைத் திறந்து கொண்டு காணும் பகல் கனவோ இல்லை. இரவில் நன்கு உறங்கியபின் நம் மனத்திரையில் ஓடுமே ஓர் காட்சி!!! அதைப்  பற்றிதான் தான் கூறுகிறேன். நம்மைக் கண்டு நாமே வியப்பதும், இரசிப்பதும், நாம் செய்யும் சில முட்டாள் தனமான செயல்களை தடுப்பதற்கு நாமே போராடுவதும், "TIME MACHINE"-ல் பயணிப்பதைப் போன்ற பிரம்மிப்பைத் தரும். "கனவு"- கண்களை மூடிக்கொண்டே மிகத் தெளிவாக பார்க்கக் கூடிய மாயை!!!

     சிறு குழந்தைகள் தூக்கத்தில் சிரித்தாலோ, திடீரென்று பீறிட்டு அழுதாலோ கனவு கண்டிருக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் ஆக அப்பொழுதே நமது கனவுப் பயணம் தொடங்குகிறதா?!?!. நான் நடுநிலைப் பள்ளியில் இருந்த பொழுது தூக்கத்தில் புலம்புவதாக அம்மா கூறக் கேட்டதுண்டு. என் உளறலைக் கேட்டு என் தம்பி திடுக்கிட்டதாகவும் கூறுவான். பரீட்சை நேரங்களிலும், விடுமுறைக்  காலங்களிலும் (சித்திப் பெண்ணுடன் பேசுவதே முழுநேர வேலை) மட்டுமே நான் தூக்கத்தில் பேசுவதாக அம்மாவின் ஆய்வு கூறியது !!! என் புலம்பலை ஒரு முறை கேட்ட தாத்தா மந்திரிக்க அழைத்து சென்றுவிட்டார்.

     ஒரு நாள் தூக்கத்தில் எழுந்து நடக்க முயன்றதாகவும், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் புத்தகம் வாங்கச் செல்வதாக கூறினேன் என்றும் அம்மா கூறினாள். அதன் பிறகு அவ்வாறு எதுவும் நிகழவில்லை ஆனால் என் புலம்பல் மட்டும் கல்லூரிக் காலம் வரை தொடர்ந்தது. என்னிடம் எந்த இரகசியத்தையும் கூறக் கூடாது... தூக்கத்தில் உளறி விடுவேன் என்று என் தோழிகள் கேலி செய்வார்கள். ஆனால் என் புலம்பல் யாருக்கும் புரியாது. ஏதோ பேசுகிறேன் என்று மட்டும் தெரியும். இவை எதுவும் எனக்கு காலையில் ஞாபகத்தில் இருக்காது. நான் காணும் கனவுகளைத் தவிர...

     கல்லூரியில் எங்கள் விடுதியைச் சுற்றி இருக்கும் மரங்களை அறையின் ஜன்னல் வழியே பார்க்கலாம். அப்போது ஆரம்பித்ததுதான் இந்த வினோத அனுபவம்!!! நடு இரவில் சட்டென்று தூக்கம் கலையும். கண்விழித்து பார்த்தால் நேர் எதிரே தெரியும் மரக்கிளையில் ஏதோ உருவம் அமர்ந்து இருப்பது போல் இருக்கும். பதறி அடித்து என் தோழியையும் எழுப்பி விடுவேன். விளக்கை போட்டு பார்த்தால் எதுவும் இருக்காது. சில சமயம் உருவத்திற்கு பதிலாக சிலந்தி, பாம்பு போன்ற ஜந்துக்களும் தெரிவதுண்டு!!! சில நாட்களுக்கு ஜன்னலை திறக்கவே மாட்டோம்.

     ஒருநாள் அம்மாவும் அப்பாவும் ஊருக்கு சென்றிருந்தார்கள். நானும் என் தம்பியும் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தோம். தூங்கி ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது. எழுப்பிவிட்டேன் தம்பியை... பூட்டில் எலி அமர்ந்திருப்பதாக ஒரே ரகளை. மறு நாள் திட்டித் தீர்த்து விட்டான். எங்கள் வீட்டில் அனைவருக்கும் கனவு வருவதுண்டு அது ஞாபத்திலும் இருக்கும். காலையில் கதை கதையாகக் கூறுவோம். இவ்வளவு நீண்ட கனவா? ராத்திரி பூரா சினிமா மாதிரி உனக்கு தெரியுமா? என்று என் கணவர் என்னை கேலி செய்வதுண்டு.


     இப்போது வரை இந்த அனுபவம் தொடர்கிறது. ஜன்னல் வழியே மரங்கள் தெரியும் வண்ணமே படுக்கை அறைகள் அமைகின்றன. முதலில் எல்லாம் என் கணவரை எழுப்பி விடுவேன் ஆனால் இப்பொழுதெல்லாம் நன்றாக கண்களைத் திறந்து பார்க்க முயற்சிப்பதால் தூக்கம் கலைந்து நான் காண்பது உண்மை இல்லை என்று உணர முடிகிறது அதனால் புலம்புவதும் இல்லை. என் கணவரின் தூக்கத்தை கெடுப்பதும் இல்லை. எனக்கு பதிலாக அந்த வேலையை என் மகள் செய்கிறாள். போர்வைக்குள் சிலந்தி, சில சமயம் தேனீ, எறும்பு ஊர்வதாக அலறுவாள். பரம்பரை நோய் போல் மாறிவிட்டது இந்தக் கனவு.

     புத்தகத்தை பரபரப்பாக திருப்பிக் கொண்டிருப்பேன். அய்யோ... முக்கியமான கேள்வியைக் கூட படிக்கவில்லையே என்று மனம் பதைபதைக்கும்... அதற்குள் மணி அடிக்கும் ஓசை கேட்கும். பரீட்சை அறைக்குள் நுழைய ஆயத்தமாவேன். எழுதப்போகும் பரீட்சை சில சமயம் தமிழாகவும் சில சமயம் அறிவியலாகவும் மாறும். பூகோளமாக இருந்தால் உலக வரை படத்தை குறிக்க மறந்து விடுவேன். மாறாமல், தவறாமல் அடிக்கடி வரும் கனவுகளில் இதுவும் ஒன்று!!!

     சில சமயம் வரும் கனவுகள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். நமக்கு வயதாகி தாத்தா பாட்டிகளாக மாறியிருப்போம் ஆனால் நம் பெற்றோர்கள் இளமையாக தோற்றமளிப்பார்கள். பல நாட்கள் பார்க்காத நண்பர்கள், ஆசிரியர்கள், இடங்கள்... ஏன் இந்த உலகத்தில் இல்லாதவர்களைக் கூட கனவில் பார்க்கலாம், பேசலாம்!!! அவ்வாறு பார்க்கும் பட்சத்தில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. கனவு ஒரு ஊடகமாக மாறிப் போனதை உணர முடிகிறது . கனவில் பார்த்த நண்பர்களை தொடர்பு கொண்டு நட்பை புதுப்பித்துக் கொண்டதும் உண்டு (FACEBOOK வாயிலாக ). எனக்கு கனவே வராது.... வந்தாலும் ஞாபகம் இருக்காது என்று கூறிக்கொண்டிருந்த என் கணவரும் இப்போது அடிக்கடி அவரது கனவுக் கதைகளை கூறத் தொடங்கி விட்டார்!!!

     கனவுகள் ஏன் தோன்றுகின்றன? எதனால் தொடர்கின்றன? கனவுகளுக்கு என்ன அர்த்தம்? என்று அறிவியலாளர்கள் பல்வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அதைப் பற்றி எல்லாம் ஆராயாமல் மகிழ்ச்சியான கனவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டும், விபரீதமான கனவுகளை மறந்தும் விடுவோமேயானால் கனவே....கலையாதே என்று சொல்லத்தான் தோன்றும் இல்லையா?!?!?!
  

Tuesday, June 16, 2015

என் தங்கை ....என் தோழி

                       வாழ்க்கைப் பாதையில் நாம் தினம் தினம்  பல மனிதர்களை சந்திக்கிறோம். அவர்களில் சிலர் நம் நண்பர்களாக மாறுகிறார்கள். சிலரை எதிரிகளாக நினைக்கிறோம்.பலரை மறந்தும்  விடுகிறோம். ...சில சமயம் நண்பர்களே எதிரிகளாக மாறுகின்றனர் ஆனால் எத்தனை எதிரிகள் நம் உயிர் நண்பர்களாக மாறுகிறார்கள்? அவ்வாறு மாறிய ஒரு செல்ல  எதிரி தான் என் தங்கை.

                    SIBLING RIVALRY - என்று கூறுவார்களே அதனாலோ என்னவோ நான் முதலில் அவளை எதிரியாகவே நினைத்தேன். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தாள். அதுவரை தாத்தாவோ, பாட்டியோ அல்லது  அம்மாவோ என்னை பள்ளியில் கொண்டு வந்து விடுவார்கள். இனிமே  ரெண்டு பேரும் சேர்ந்து போயிருங்க  என்றார்கள்.

                  நான் மிகவும் வேகமாக முன்னால் ஓடுவேன் ....நில்லு என்று கூறியவாறு பின்னால் வருவாள் என் தங்கை. நின்று விடுவேன். அவள் என் அருகில் வரும் போது மறுபடியும் ஓட ஆரம்பிப்பேன். அவள் அம்மாவிடம் சென்று அழுவாள். மறுதினம் வா... சேர்ந்து போகலாம் என்று தோளில் கை போட்டுக் கொள்வேன். பள்ளி வரும் வரை இப்படியே வர வேண்டும் என்று வலமும், இடமுமாக இழுப்பேன். என் கொடுமை தாங்க முடியாமல் அவள் தனியாகச் செல்ல ஆரம்பித்தாள்.

              தலை பின்னுகிறேன் என்று அழைப்பேன் அவளும் ஒத்துக் கொள்வாள் ஆனால் இரட்டைச் சடையில் ஒன்று காதை ஒட்டியும், ஒன்று தலையின் பின் புறமும் இருக்கும் (7 வயது சிறுமிக்கு என்ன தெரியும்). பொட்டு வைத்து விடுகிறேன் என்று பல வண்ண சாந்தைக்  கொண்டு நெற்றி முழுவதும் தீட்டி விடுவேன். நன்றாக இல்லை என்று கலைத்தாலோ, அழித்துக்கொண்டலோ கொட்டு விழும் அவளுக்கு!!! அப்பாவிடம் சென்று அழுவாள். எனக்கு திட்டு விழும். அதையெல்லாம் நான் கண்டு கொண்டதே கிடையாது.

     சித்திப் பெண்கள் அல்லது அத்தைப் பெண்கள் வந்து விட்டால் கேட்கவே வேண்டாம் எங்கள் வட்டத்தில் அவளுக்கு இடம் கிடையாது. அப்படியே அவர்கள் சேர்த்துக் கொண்டாலும் விளையாட்டில் அதிக வாய்ப்பு கிடைக்காததால்  அவளே விலகிக் கொள்வாள்.

            இருவருமாக கடைக்குச் சென்று  மிட்டாய் வாங்குவோம். நான் அனைத்தையும் ஒன்றாக வாயில் போட்டுக் கொள்வது போல பாவனை செய்து விட்டு சட்டைப் பையில் ஒளித்து வைத்து விடுவேன். அவள் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தபின் மெதுவாக  பையிலிருந்து  வெளியில் எடுத்து அவளை அழ விடுவேன். சிலசமயம் நான் MAGIC செய்ததாகக் கூறி அவளை ஏமாற்றுவேன். அவளும் நம்பி விட்டது போல் நடிப்பாள்(நிஜமாகவே நம்பினாளோ  என்னவோ!!!).


              ஒருநாள்  பள்ளியில் யாரோ அவளை அடித்து விட்டதாகக் கூறினாள். பாசக்கார அக்காவாக மாறி அடித்த பெண்ணை மிரட்டி விட்டு வந்தேன். ஏதாவது தொலைந்து விட்டால் வந்த வழியே இருவரும் சென்று மணிக்கணக்கில் தேடுவோம். சில சமயம் ஒருவருக் கொருவர் சவால் விட்டுக்கொண்டு சில சேட்டைகளில் இறங்குவோம். அவ்வாறு ஒருநாள் இருவரும் சேர்ந்து இருநூறு தோப்புக்கரணங்கள் போட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டோம்.  எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவளுக்குச் சொல்லிக் கொடுப்பேன்.

                நான் மூன்றாம் வகுப்பில் இருந்த பொழுது பள்ளியில்  ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். மாலையில் என் தங்கையிடம், இங்கிலீஷ் ஈசி, வா... சொல்லிக்கொடுக்கிறேன் என்று வாசலில் நின்று கொண்டேன். எதிர் சுவற்றில் Rajini  வாழ்க...Kamal   வாழ்க  என்று எழுதி இருந்தது. அதைக் காண்பித்து Ra என்றால் ர, Ji  என்றால் ஜி ,Ni என்றால் னி  என்று சொல்லிக் கொடுத்தேன். அதே போல் தான் கமல் என்ற சொல்லையும் படிக்க வேண்டும் என்று கூறினேன். என்னை அவள் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டாள்.

                   மறுநாள் அவள் என்னிடம் சுவற்றில் இருந்த "ADMK "  "DMK" என்ற சொல்லைக் காண்பித்து எவ்வாறு வாசிப்பது என்று கேட்டாள். அதற்கு நான் DMK  என்றால்  டும்க் என்றும் ADMK  என்றால் அடும்க் என்றும் கூறினேன். நிஜமாவா?!?! என்றாள். ஆமாம்  இங்கிலீஷ்ல  அப்படியெல்லாம் வரும் என்று சமாளித்தேன் ஆனால் அவளுக்கு சந்தேகம் எழுந்ததது என் கதையும்  கந்தலானது. அடுத்து வந்த சில நாட்களில் பரதம் சொல்லிக் கொடுத்தேன். அது எவ்வாறு இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள்!!!

                  இந்த உரசல்கள் எல்லாம் தொடக்கப் பள்ளியோடு நின்று போனது. பின்பு வந்த நாட்களில் நாங்கள் தோழிகளாக  மாறினோம். வீட்டு வேலைகளைப் பகிர்ந்து,சேர்ந்து  செய்வோம். பள்ளியில்  நடக்கும் சம்பவங்களை பரிமாறிக் கொள்வோம். சினமாக் கதைகளை மாறி மாறி சொல்லிக் கொள்ளவே  நேரம் போதாது .

     நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்பொழுது முக்கியமான   பொருட்களை எங்காவது வைத்து விட்டு தேடுவதே வழக்கம். கோபமும், அழுகையும் மூக்கில் மேல் வரும் எனக்கு. அப்பொழுதெல்லாம் மிகவும் பொறுமையாக எனக்கு தேவையானதைத் தேடிக் கொடுப்பாள். சாலை விபத்தில் சிக்கியதால் என்னால் புத்தகப் பையை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் போனது. ஒரு வருடம் முழுவது அவளே என் வலது கையாகவும் இடது கையாகவும் இருந்தாள். தங்கையாக இருந்த அவள் எனது அக்காவாகவும் மாறினாள்.


                      பின்பு கல்லூரி நாட்களில் ப்ராஜெக்ட் வேலைகளில் பல யோசனைகளையும், உதவிகளையும் செய்வாள். எனது திருமணத்தின் போதும்  என்  உற்ற தோழியாக செயல்பட்டாள். அன்று முதல் இன்று வரை பல நேரங்களில் எனக்கு "MORAL " சப்போர்ட்- ஆக இருப்பவளும் அவள் தான்!!!

             " நாம் இருவர் நமக்கு இருவர்"  என்றவர்கள் "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்று மாறிவிட்டார்கள். இனி எதிர்காலத்தில் "நாமே இருவர் நமக்கு ஏன் ஒருவர்?!?!" என்று கூறினாலும் ஆச்சரியபடுவதற்கில்லை அவ்வாறு மாறும் பட்சத்தில்  மேற்கூறிய என் அனுபவங்கள் அவர்களுக்கு கற்பனைக் கதையாகவே  தோன்றும். இல்லையா !!!!


                 

Wednesday, May 27, 2015

முதல் ...... முதலாய்.....

                        அன்று வீடே  அல்லோல கல்லோல பட்டுக் கொண்டிருந்தது. அம்மா பஜ்ஜி,சொஜ்ஜி சுடும் சமையல் வேலையில் மும்முரமாயிருந்தாள். அப்பா கடையில் வாங்க வேண்டிய  சாமான்களின் பட்டியலோடு வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார். தம்பியும், தங்கையும் பம்பரமாக சுழன்று வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். எதற்கு ?!?!  அந்த வீட்டுப்  பெண்ணை முதல் முதலாக பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் மாலையில் வருவதாக இருந்தது மாப்பிள்ளையுடன்!!!... அதற்காகத்தான்!!!


                 இப்படியெல்லாம் எங்கள் வீட்டில் எதுவுமே நடக்கவில்லை. நடந்தது என்ன ?!?!?!

                   டெலிபோன் விடாமல் சினுங்கியது. இவ்வளவு காலையிலே யாரு போன் பண்றது ?!?! சொல்லிக் கொண்டே அப்பா போனை எடுத்தார். சித்தப்பா தான் பேசினார். நேரடியாக விஷயத்துக்கே வந்தார். நம்ம பொண்ணோட ஜாதகம்  பொருந்தி இருக்கு....மாப்பிளை வந்ததும் பொண்ணு பார்க்க வர்றேன்னு  சொல்லி இருந்தாங்களே  என்று மாப்பிள்ளையின் விவரங்களை கூறினார். 

                 ஆமா ...என்றார் அப்பா. தொடர்ந்தார் சித்தப்பா. மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து  ரெண்டு நாளைக்கு முன்னாடி  வந்துட்டார். இன்னைக்கு காலையில  பொண்ணு பார்க்க வர்றதா அவங்க அம்மா போன் பண்ணி சொன்னாங்க  சந்தோசம் கலந்த பரவசத்துடன் கூறினார் சித்தப்பா.


     இன்னைக்கா? சனி, ஞாயிறுன்னா  வீட்டுக்கு வருவா. இன்னைக்கு  எப்பிடி? என்று இழுத்தார் அப்பா. 

போன் பண்ணி வரச் சொல்லுங்க? என்றார் சித்தப்பா.

             அவகிட்ட போன் இல்ல....office க்கு தான் கூப்படணும்  ஆனா ஒன்பது மணிக்கு மேலதான் OFFICE  தொறப்பாங்க என்றார் அப்பா.

          அனைவரும் சற்று பரவலாக செல் போன் வாங்கத் தொடங்கிய நேரம் அது. நம்மக்கெதுக்கு செல்!?!? என்று நான் வாங்கவில்லை. இரண்டு மூன்று நாளுக்கொரு முறை நானே வீட்டிற்கு போன் செய்வதுண்டு.

                என்னன்னே  நீங்க ? அவங்க அம்மா  மூணு நாலு பொண்ணுங்களை  short லிஸ்ட்  பண்ணி இருக்காங்க. நான்தான்  நம்ம பொண்ண மொதல்ல பாக்கட்டும்னு சொன்னேன். நம்ம பொண்ணோட போட்டோ பாத்து புடிச்சதாலே அவங்களும் சரின்னு சொல்லியிருக்காங்க. நீங்க என்னன்னா.... இப்பிடி பேசுறீங்களே?!?! டென்ஷன் ஆனார் சித்தப்பா.

           அடுத்த பஸ்ஸில் அப்பா கிளம்பிவிட்டார் என்னை அழைத்துவர.....


         வீட்டிலிருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவில் அலுவலகம் இருந்தது. நான் எப்பொழுதும் போல அலுவலக பஸ்ஸிற்காக காத்திருந்தேன். பஸ்ஸில் ஏறி அமர்ந்த மறு கணமே யாரோ என் பேரைச் சொல்லி உங்க அப்பா வந்துருக்காங்க....என்றனர். எங்க அப்பாவா?!?! குழப்பத்துடன் கீழே இறங்க அப்பா நின்று கொண்டிருந்தார். என்னப்பா?  என்னாச்சு? அம்மாவுக்கு உடம்புக்கு முடியலையா?!? என்றேன் கவலையுடன்.    

     அங்கிருந்து  நான் தங்கியிருந்த அறைக்குச்  செல்லும் வழியில் நடந்ததை விரிவாகக் கூறினார் அப்பா. சாய்ங்காலம்  பொண்ணை  காமிச்சிறலாம்ன்னு சித்தப்பாவை சமாதானப்படுத்திருக்கேன்  என்றார் பயணக் களைப்புடன். 

                டைம் டேபிள் போட்டுட்டு பொண்ணு பாக்குறாரா மாப்பிள்ளை??  என்று  கேலி செய்தாலும் அப்பாவை இப்படி அலையவிற்றாங்களே என்று கோபமாக வந்தது. மாப்பிளைக்கு என்னை பிடிக்கக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டேன். 

           வீட்டிற்கு வந்ததும் ஒரு மாப்பிள்ளை போட்டோவை அப்பா காட்டினார்.

          அய்யய்யோ நல்லாவே இல்லையே...  இவரா இன்னைக்கு வர்றாரு என்றேன் நான்.

இல்ல...இந்த போட்டோ புரோக்கர்  குடுத்தது  என்றாள்  அம்மா.

சனிக்கிழமை பொண்ணு பாக்க வரலாமான்னு கேட்ருக்காங்க தொடர்ந்தாள் அம்மா.  என்னக்கு பிடிக்கல வேண்டாம்  என்றேன். 

அப்பா எதிர்பாராத விதமாக கோபத்தில்  திட்டத் தொடங்கி விட்டார். எதுக்கு பிடிக்கல? என்ன கொறச்சல்? என்றார்.

என்னமோ பாத்த உடனே புடிக்கலே...என்றேன்.

           போட்டோ மட்டும்  பாத்து  பிடிக்கலை பாக்க வரவேண்டாம்னா என்ன அர்த்தம்?...மனசுல ஹீரோயின்னு  நெனப்பு  உன்  பொண்ணுக்கு என்று அம்மாவுக்கும் சேர்த்து கிடைத்தது வசவு. நேர்ல பாத்தாதானே எப்படி இருக்கார்ன்னு தெரியும் என்றார். சனிக்கிழமை வரட்டும் என்றார். எனக்கு அழுகையுடன் அப்பாவின் மேல் கோபமும்   பீறிட்டுக்கொண்டு வந்தது. 

            முதல்ல இன்னைக்கு நடக்குறதப் பார்ப்போம் அம்மா சமாதானம் கூறினாள். சும்மா அழுகாத...முகமெல்லாம்  வீங்கிரும் அப்புறம் சாயந்திரம் நல்லா இருக்காது என்றாள். அப்பா கோவப் படுவார் ஆனா நமக்கு பிடிக்காத எதையும்  செய்ய மாட்டார் என்று தங்கையும் எனக்கு ஆறுதல் கூறினாள்.

               அன்று  வழக்கத்துக்கும் மாறாக வீடு அமைதியாக இருந்தது. அம்மா கடையிலிருந்து வாங்கவேண்டிய  பொருட்களின் பட்டியலை தயார் செய்து கொண்டிருந்தாள். அப்பா அசதி காரணமாக கண் அயர்ந்து விட்டார். பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் இல்லியா? என்று தம்பி கேட்க, இப்பல்லாம் ஸ்வீட், காரம்  என்று கடையில் தான் வாங்குகிறார்கள்  என்று அம்மா சொல்லி கொண்டிருந்தாள். நான் முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.  ஹாலில் இருக்கும் ஷெல்ப்பை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் தங்கை.

             கடிகாரம் ஐந்து அடித்தது. நானும் என் தங்கையும் புடவையுடன் போராடிக் கொண்டிருந்தோம். அம்மா கையில்  ஒரு பெரிய  தோடுடன் வந்தாள். இத போட்டுக்கிட்டு சீக்கிரம்  ரெடி ஆகுடி என்றாள். அப்பா வெளியில் சென்றிருந்தார். 

                             சுடிதார் போட்டா பத்தாதா? அவங்க என்ன வேட்டியா கட்டிட்டு வரப்போறாங்க  என்று  என் கோபத்தை புடவையிடம்  காண்பித்தேன். தோடு வேறு காதில் நுழைவேனா என்று என்னைப்போலவே அடம் பிடித்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அழுகாதடி  என்றாள் தங்கை. இதுக்கு போய் அழுவியா?  என்று  உண்மையான காரணத்தை அறியாத தம்பி கிண்டலடித்தான். 

           நேரமும் ஆனது....மாப்பிள்ளையும் வந்தார். முதல் பார்வையிலே பிடித்துவிட்டது. சோகமும் அழுகையும் தொலைந்து விட்டது. நன்றாகப்  பேசினார். பெரிய குடும்பத்திலே வளந்திருக்கீங்க.... U.S ல வந்து தனியா இருந்திருவீங்களா? என்றார். ம்ம்ம்ம்  என்று பெரிதாக தலை ஆட்டி வைத்தேன் வெட்கம் கலந்த புன்னகையுடன். வீட்டிற்கு போய் போன் பண்றோம் என்று கிளம்பி விட்டனர். காலையிலே ஒரு பொண்னை  பாத்துட்டாங்க....என்று சித்தப்பா அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

                    விடுங்க சித்தப்பா....பிடிச்சா சொல்லுவாங்க முதல்ல பாக்காட்டி என்ன? என்று கூறினேன் ஆனால் சனிக் கிழமை வரப்போகும்  போட்டோ மாப்பிள்ளையை  நினைத்து மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. மறுதினமே பெண் பிடித்து விட்டது என்று பதிலும்  வந்து விட்டது. உறவினர்களிடம் காட்டுவதற்காக  ஒரு போட்டோவை கொடுத்து அனுப்பினார்கள். மாப்பிளை சுமார்தான்...உனக்கு பிடிச்சிருக்கா?!?! என்று போட்டோவைப்  பார்த்தவாறு சித்தி கேட்டார். ம்ம்ம் நேர்ல நல்லா இருந்தாங்க என்றேன் மனதில் அப்பாவை நினைத்தவாறு ....முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் ஒன்று  என்ற பாடல் எங்கோ தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.


                 திருமணமாகி  ஒன்பது வருடங்கள் ஆகப்போகிறது.  அந்த மாப்பிள்ளைக்கு பயந்து தான் உங்களுக்கு O.K  சொன்னேன். உங்க போட்டோவை மட்டும் நான் முதல்ல பாத்திருந்தேன் அவ்வளவுதான்  என்று நான் கூற , நீ நேர்ல சுமார் தான் ஆனா முதல்ல  போட்டோ- ல பார்த்த ஒடனே புடிச்சிருந்திருச்சு  அதனால தான் நானும் O.K  சொன்னேன் என்று அவரும் இன்று வரை இதைப் பற்றிப்  பேசி சிரித்துக் கொண்டிருக்கிறோம். இன்று  எங்களிடையே இல்லாத சித்தப்பாவையும் நன்றியோடு நினைக்கத் தவறுவதில்லை.

            கடைசியாக உங்களிடம் ஒரு கேள்வி? ஒருவரைப் பார்த்தவுடன் ஏற்படும்   " FIRST IMPRESSION" - முதன்  முதலில் மனதில் தோன்றும் எண்ணங்கள் முக்கியமா ? அதை அடிப்படையாக வைத்து  முடிவுகளை எடுப்பது சரியா?!?!? உங்கள் அனுபவம் என்ன?!?!




                         
    
        



   



Tuesday, May 12, 2015

ஆட்டம்..பாட்டம்..ஓட்டம்

                  வெயில்  மண்டையைப்  பிளக்கும் மதிய வேளையில் மூச்சிரைக்க  ஓடினாள் வேதி(கா). இதயம் வெளியே வந்து விழுந்துவிடுவதைப்  போல்  படபடவென்று  துடிக்கும் ஓசை காதுகளில் ஒலித்தது . மெல்லிய  இளங்  காற்று  அந்த வயல் வரப்புக்களில் வீசிக் கொண்டிருந்தாலும் வேதியின் முகத்தில் வியர்வை வழிந்தோடியது .

                   வேதியின் முன்னால்  இரண்டு பெண்கள் ஓடிக்கொண்டிருந்தனர். சீக்கிரம் வாடி வேதி.... அவன் வர்றான்.... என்று இவளைப் பார்த்துக்  கூவினர் அந்தப் பெண்கள். பயம் கலந்த பீதியுடன்  பின்னால் திரும்பிப்  பார்த்தாள். அய்யய்யோ.... என்ற வேதி, வேகமா வா என்பது போல்  தன் பின்னால் வந்து கொண்டிருந்த தன் தங்கை ரித்தி(கா )விடம்  கையை ஆட்டினாள். அவளின் ஓட்டத்தின் வேகம் பன் மடங்கு  கூடியது.


                       சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு கனவு கலைந்து  கண் முழித்தாள் வேதி. "என்ன ஒரு கனவு!?" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.  நன்றாகவே  விடிந்திருந்தது . அவசர அவசரமாக எழுந்து அறை குறையாக பல் தேய்த்துவிட்டு  வந்தாள்.

அம்மா.....எத்தனை மணிக்கு அத்தை வருவாங்க? என்று கேட்டாள்.

"இப்பதாண்டி  விடுஞ்சிருக்கு... மத்தியானத்துக்கு மேல வருவாங்க",  என்றாள் அம்மா.

ஒ....என்று  உற்சாகம் இழந்து போய் அமர்ந்தாள் .


               முழு ஆண்டு விடுமுறை ஆரம்பித்து பத்து நாட்களே ஆகியிருந்தது. வழக்கமாக அம்மா வழி பாட்டி வீட்டில் தங்கி சித்தி பிள்ளைகளுடன் விளையாடும் வேதி இம்முறை தன்  வீட்டிலேயே இருந்தாள். காரணம் அத்தை ஊரிலிருந்து வருவதாக இருந்தது. அப்பா வழிப் பாட்டியும், இரண்டு சித்தப்பாக்களும் இவர்களுடன்  கூட்டுக் குடும்பமாக வசித்தனர். ஒருவழியாக மதியம் வந்தது அத்தையும் வந்தார்கள்!!! இரவு வரை அத்தை பெண்களுடன் கதை  பேசி, விளையாடி அசதியில் அனைவரும் ஒன்றாகவே உறங்கினர்.

         
             அடுத்த  சில நாட்கள்  மின்னல் வேகத்தில் பறந்தது.  மனதில் வைத்திருந்த அனைத்து விளையாட்டுக்களும் அத்தை பிள்ளைகளுடன் விளையாடி முடித்தாகிவிட்டது. நாட்கள்  செல்லச் செல்ல சேட்டைகள் அதிகமாகிக் கொண்டே போயின. ஒருநாள்  மருதாணி என்று  ஏதோ ஒரு இலையை வைத்து அரைத்து  அம்மிக்கல்லை பாழாக்கினர். மறுதினம் பக்கத்து வீட்டு தாத்தாவின் பூனைக் குட்டியை வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்து வளர்ப்போம் என்று பிடிவாதம் செய்து வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டனர். பாட்டியின் மாங்காய் ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு வீட்டிற்கும் பாத்ரூமிற்குமாக அலைந்து ஒருநாள் கழிந்தது.

                     அன்று காலை அனைவருமாக  ஒரு முடிவுக்கு வந்தனர். பாட்டியிடம் சென்று, "போரடிக்குது பாட்டி...  பெரிய தோப்புக்கு  போயிட்டு வர்றோம்" என்றனர். "அவ்வளவு தூரம்  தனியாவா?!  வேண்டாம்" என்றாள் பாட்டி. "பத்து நிமிஷத்தில போயிறலாம் பாட்டி" என்று  அடம் பிடித்து அனுமதி வாங்கினர். "அப்பிடியே  அங்க  இருக்கிற  தோப்புக்கார  தாத்தா
( watch man) கிட்ட மோட்டார்  போடச் சொல்லி குளிச்சிட்டு வாங்க" என்று பாட்டியும், "துணியெல்லாம் தொவச்சிட்டு வந்திடுங்க" என்று  அத்தையும் கூறி அனுமதி வழங்கினர். "சீக்கிரம் வந்திருங்க யாராச்சும் கடத்திட்டு போயிடப் போறாங்க" என்று பயமுறுத்த முயன்றனர்.

                   தோப்பிற்குள் உற்சாகமாக  நுழைந்த குழந்தைகள் தண்ணீரில் குதித்து ஆட்டம் போட்டனர். சோப்பு நுரைகளில் விளையாடியபடி துணிகளை துவைத்தனர். கால்வாயில் மீன் பிடித்தனர். பட்டாம்பூச்சி பிடித்தனர். வரப்பு ஓரத்தில் ஊரும் ரயில் பூச்சியின் முதுகில் இலைகளை ஏற்றி அழகு பார்த்தனர். நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வெயில் மண்டையைப் பிளந்தது. வாட்ச்மேன் தாத்தாவும் சாப்பிட வீட்டிற்கு போய் விட்டார். ஆள் அரவமே இல்லை.  ஒரு இளைஞன் மட்டும்  குளித்துவிட்டு வந்தான். இவர்களின் உடை, தொப்பி, கையில் இருக்கும் தூண்டில் போன்றவற்றை ஓரிரு நிமிடங்கள் நோட்டமிட்ட அவன் பழகியவன்  போல் பேச ஆரம்பித்தான். "வீட்டுக்குதான போறிங்க?... வாங்க கூட்டிட்டு போறேன்" என்றான். பாட்டியின் எச்சரிக்கை அனைவரின் காதுகளிலும் கேட்டது. "வாங்க..போயிரலாம் " என்று ஓட்டம் பிடித்தார்கள் . நண்டு சிண்டுகள் எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் இவர்களைப் பின் தொடர்ந்தனர்.


                     "ஏய் ....நில்லுங்க ....ஓடாதிங்க"  என்றவாறு  சற்று வேகமாக அவர்களைப்  பின் தொடர்ந்தான் அந்த வாலிபன்.  "இந்த பக்கம் வழி இல்ல வேலி போட்டிருக்கு" என்றான். இவர்களின் ஓட்டம்  மேலும்  அதிகரித்தது. வயதில்  மிகவும்  இளையவளான  ரித்தியால் ஈடுகொடுக்க முடியவில்லை. அம்மா..என்று  வயல் வரப்பில் தடுக்கி விழுந்தாள். அவளை தூக்கி விட்ட வேதி " நீ முன்னால போ " என்று  அவளுக்கு  பின்னாள்  போனாள். கனவு பலித்து விட்டதே என்று நினைத்தாள்.

              இதற்கு மேல்   வேதியாலும்  ஓடமுடியவில்லை. தலை சுற்றுவது போல் இருந்தது. கண்களெல்லாம் இருட்டிக்கொண்டு வந்தன . ஓட்டத்தால வெய்யிலாலா என்று தெரியவில்லை. அந்த இளைஞன் கிட்ட தட்ட அவர்களை  நெருங்கிவிட்டான். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

                "ஏன் இப்படி ஒடுறீங்க? எனக்கு உங்க பாட்டிய நல்லாவே தெரியும்" என்றான். வேதியின் அப்பா பெயர் கூறி,  அவர் பொண்ணு  தானே நீ? என்று
வினவினான்.

   அப்போது..

  "ஏய்  வேதி, ரித்தி  இந்த வரப்பு வழியா போனா  சீக்கிரம் வீட்டுக்கு போகலாம் ஓடி வாங்கடி" என்று  அத்தைப்  பிள்ளைகள்  அலறினர். பிய்ந்த வேலியின் கீழிருந்து நுழைந்து  வரப்பு  வழியாக தப்பி ஓடினர். அந்த இளைஞனால்   நுழைய முடிய வில்லை. சிரித்த படி தலையை ஆட்டிக் கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

         
           வரப்பு  முழுவதும் பூக்கள் நிறைந்திருந்தது. கால் வைத்து நடக்க முயன்ற போது முள்ளாகக் குத்தியது. திரும்பிப்  பார்த்தனர் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். நம்ம கடத்திட்டு போகத்தான் நிக்கிறான் போல என்று அத்தைப் பெண்ணில் பெரியவள் கூறினாள். வேறு வழியில்லாமல் முள்ளின் மேல் ஓடி ஒருவழியாக வீட்டை அடைந்தனர்.வெளியே சைக்கிள் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் மேல் இவர்களின் வாளி.. துவைத்த துணிகளை எடுத்து வரவில்லை என்று அப்போதுதான் உரைத்தது.

              "ஏம் பிள்ளைகளா  இப்பிடி ஓடிவறீங்க?" அம்மா கேட்டாள். ஒண்ணுமில்லை என்றனர். முன்னறையில் அதே  இளைஞன் பெஞ்சில் அமர்ந்து காபி அருந்தி கொண்டிருந்தான். "சித்தப்பாவோட தோஸ்து  ஞாபகம் இருக்கா?" என்று அம்மா கேட்டாள். "கூப்ட கூப்ட கேக்காம ஓடுதுங்க..." என்று அவன் கூறினான். அவனை முறைத்த படி உள்ளே சென்ற தோழிகள் விழுந்து விழுந்து சிரித்தனர். முள் குத்திய வலியையும்  மறந்து!!!.















Tuesday, April 21, 2015

மிதிவண்டி பயணம்



நான் தொடக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரமது. எனது அப்பாவின் மிதிவண்டியில் அன்றாடம் பயணம் செய்வது வழக்கம் .நாங்கள் வசித்த வீடு 30 நிமிட தொலைவில் இருந்தபடியால் களைப்பு தெரியாமல் இருபதற்காக ஏதாவது பேசியபடியும் ,விளையாடியபடியும் செல்வது வழக்கம் .நானும் என் அண்ணனும் பின் இருக்கையிலும் என் தங்கை முன் இருக்கையிலும் பயணிப்போம் .

சாலையில் இருபுறங்களிலும் இருக்கும் அரிசி மண்டிகளின்  பெயர்களை சரியாக சொல்லவேண்டும் . இது ஒரு விளையாட்டு .கண்களை மூடிக்கொள்ள வேண்டும் சிறிது நிமிடம் கழித்து எங்கள் அப்பா எங்களிடம் நாம் எங்குவந்து கொண்டிருக்கிறோம் என்று கேட்பார் யார் சரியாக யூகிக்கிறார்களோ அவருக்கே வெற்றி . சிலசமயம் திருக்குறள் சொல்லியிருக்கிறோம் ஏன் சிலசமயம் சினிமா பாடல்களையும் பாடுவோம். மிகவும் மகிழ்ச்சியான மனதில் எந்த கவலையும் இல்லாத தருணம் அது . 

விளையாட்டு ஆர்வத்தில் வண்டிச்சக்கரத்தில் காலை விட்டு  அழுத கதையும் உண்டு.வலது புறம் திரும்பும் பொழுது கை காட்டி சிக்னல் செய்ய வேண்டும் அதற்கும் எங்களுக்குள் போட்டி உண்டு. ஒரு முறை என் தம்பியுடன் பயணிக்கும் போது திரும்பும் சாலை வந்தவுடன் கையை காட்டு  என்று அப்பா கூற ஒன்றும் புரியாமல் அவன் முழித்திருக்கிறான். கையை காட்டு என்று மீண்டும் கூற என் அப்பாவின் முகத்திற்கு நேராகக்  கையைக் காட்ட,என் அப்பாவே சுதாரித்து திரும்பி விட்டார். இன்றும் அதை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறோம்.
 
ஒரு நாள் ஒரு புதிய விளையாட்டை (போட்டியை ) அப்பா அறிமுகப்படுத்தினார் . மூன்று தெருக்கள் இருந்தது எந்த வழியில் சென்றாலும் எங்கள் பள்ளியை அடையலாம் . எந்த தெருவில் திரும்பப்போகிறோம் என்று யூகிக்கவேண்டும் . நானும் என் அண்ணனும் எங்கள் யூகங்களை பகிர்ந்து கொள்வதுண்டு ஆனால் என் தங்கை முன்னிருக்கையில் அமர்வதால் மனதிலே வைத்துக்கொள்ளவேண்டி இருந்தது. சிலசமயம் நானும் சில சமயம் என் அண்ணனும் ஜெயிப்போம் ஆனால் என் தங்கை மட்டும்  எல்லா சமயமும் ஜெயித்ததால் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது .

இங்கு என் தங்கையைப் பற்றி ஒரு விஷயம் கூறியே ஆக வேண்டும். என் தந்தையின் வலதுகை அவள் . அவருக்கு எல்லா உதவிகளையும் செய்வாள் . அவரின் உடமைகளை அவள் வசமே வைத்திருப்பாள் . அவரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதே அவளின் குறிக்கோளாக இருந்தது அதில் வெற்றியும் கண்டிருந்தாள். இதனால் என் தங்கை ஏமாற்றுவதாக நாங்கள் வாதிட்டோம் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவே இவ்வாறு  செய்வதாக நகைத்தோம். ஆனால் அவள் மறுத்தாள் . இன்று வரை அது எங்களுக்கு ஒரு புதிராகவே  இருக்கிறது.
       
இயந்திரத்தனமான  இன்றைய  சூழலில், நம் குழந்தைகளிடம் நேரம் செலவிடுவதற்காக நேரத்தை தேடும் முயற்சியில் அன்றாடம் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடுகிறோம். ஒரு  எளிய வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தர மறந்து விடுகிறோம் . மிக பரபரப்பான  சூழலிலும் எவ்வாறு அமைதியாக இருப்பது என்பதுதான் அது . எங்கள் பள்ளியில் இருந்து 30 நிமிட பயணத்தில்  எங்கள் தந்தையின் அலுவலகம் இருந்தது . பணி நிமித்தமான உளைச்சலை ஒருபோதும் எங்களிடம் காட்டியது இல்லை. பள்ளியின் கவலைகளை மறந்து  நாங்களும் விளையாடினோம் .

சிறு  சிறு விளையாட்டுகளின் மூலம் நாம் நம் குழந்தைகளின் தோழர்கள் ஆக   மாறிவிடுகிறோம் என்பதை மறுக்க முடியாது . எங்கள் கல்லூரிப் படிப்பு முடியும்வரை எங்கள் தந்தையுடன் நானும் என் தங்கையும் பயணித்தோம் . மிதிவண்டி இருசக்கர வாகனமாக மாறியது ஆனால் மாறாதது எங்கள் தந்தையுடனான எங்கள் நட்பு , என் தங்கையும்தான்!!!அவளைப் போன்று பெற்றோர்களின் கவனத்தை பெற இன்றைய சிறார்கள் முயல்வதும் இல்லை அதற்கான நேரமும் அவர்களிடம் இல்லை !!!

Sunday, February 22, 2015

கனவுக்கோப்பை

இரண்டு நாட்களுக்கு முன்பு... பள்ளியிலிருந்து திரும்பிய எனது ஒன்பது வயது மகள் கேட்ட  கேள்வி -  "நீங்கல்லாம் சின்ன பிள்ளையா இருக்கும் போது ஹாக்கி தான் பாப்பீங்களா?!"

இல்லையே..ஏன்டா கேக்குற?!

 "இன்னைக்கு P.E பீரியட்- ல ஹாக்கி விளையாடினோம்..அது India's நேஷனல் கேம்ன்னு டீச்சர் சொன்னாங்க...அதான்" என்றாள். அவளுடைய கேள்விக்கான பதில் இதோ இங்கே...   

நம் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் நம்மில் பல பேருக்கு பிடித்த விளையாட்டு "கிரிக்கெட்" தானே?!. அதுவும்  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பித்து விட்டது என்றால் கேட்கவா வேண்டும்... இதுவரை கவனிக்காதவர்கள் கூட உற்று நோக்கத் துவங்கிவிடுவார்கள். ஆர்வம் இல்லாதவர்களுக்குக் கூட ஆர்வம் தொற்றிக்கொண்டுவிடும்  காய்ச்சல் போல. இன்று வருடம் முழுதும் I.P.L என்ற பெயரில் பல சேனல்களில் கிரிக்கெட் ஒளிபரப்பாகிறது. விரும்பினால் பார்க்கலாம் இல்லையென்றால் சேனலை மாற்றிவிடலாம்.

   பல வருடங்களுக்கு முன் பெரும்பாலான வீடுகளில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலம். ஒரு சில கிரிக்கெட் தொடர்கள்   மட்டுமே ஒளிபரப்பாகும். விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அதைத்தான் பார்க்கவேண்டும்.அவ்வாறு கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்களும் உண்டு.

பல தாய்மார்களுக்கு கிரிக்கெட் எதிரியாக இருந்தது . "முழுப்பரிட்சை வருது இப்போ போய் கிரிக்கெட் போட்றான் நல்லா மார்க்கு வாங்கின மாதிரிதான்" என்று புலம்புவார்கள். என் கணவர் கூட அடிக்கடி கூறுவார் எனக்கு பிளஸ் 2ல் மார்க் கொறஞ்சதுக்குக் காரணமே கிரிக்கெட் தான் என்று. வெள்ளி,ஞாயிறுகளில் கிரிக்கெட் என்றால் ஒளியும் ஒலியும் போச்சே, படம் போச்சே என்று புலம்பி கிரிக்கெட்டையும் தூர்தர்சனையும் கரித்துக் கொட்டிய தாய்க்குலங்களும் உண்டு !!!

     எங்கள் வீட்டில் ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு  கிரிக்கெட் வீரரை பிடிக்கும் அதனால் தங்களுடைய "ஹீரோ" நன்றாக விளையாட வேண்டும், "Man Of The Match" ஜெயிக்க வேண்டும் என்று எங்களுக்குள் போட்டி. அவர் கேப்டன் ஆக இருக்கும் பட்சத்தில் "Presentation Area" கண்டிப்பாக பார்க்க வேண்டும்.அவர்கள் பேசும் ஆங்கிலம் அறை குறையாகப் புரிந்தாலும் அதிலும் ஆனந்தமே. சில சமயம் செய்திகளுக்கு நேரமாகிவிட்டால் "Presentation Ceremony"-யை போட மாட்டார்கள். தூர்தர்ஷனை திட்டித் தீர்த்துவிடுவோம். மறுநாள் பள்ளியில் நண்பர்களுடன் டிஸ்கஸ் செய்ய வேண்டுமே!!!! இன்றுபோல் replay எல்லாம் கிடையாது .கிரிக்கெட் நாளில்"total off " என்று கரண்ட் கட் என்றால் அழுகையே வந்துவிடும். Whats-app ல் ஸ்கோர் தெரிந்து கொள்ளும் வசதி கிடையாது.

     உலக கோப்பை தொடர் ஆரம்பிக்கும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அதற்கான அட்டவணை, கிரிக்கெட் வீரர்களின் சாதனைகள் அடங்கிய Sports Supplementary செய்தித் தாள்களில் வெளிவரத்  துவங்கிவிடும். கிரிக்கெட் வீரர்களின் ப்ளோ -அப்  புகைப்படங்களும் அதில் அடக்கம். இங்கு எங்கள் வீட்டில் செய்தித்தாள் விநியோகம் செய்தவரைப் பற்றிச்  சொல்லியே ஆக வேண்டும்.பள்ளி செல்லும் முன் பேப்பர் (சினிமா துணுக்கு) படித்துவிடலாம் என்றால் முடியவே முடியாது. பேப்பர் லேட்டாகவே வரும். கவனமாக இணைப்புகளை தவறவிட்டு விடுவார். நானும் என் தங்கையும் மாறி மாறி சண்டை பிடித்தாலும் "அப்படியா..... இல்லையா?" என்று ஒற்றை வார்த்தையை மட்டுமே உதிர்க்கும் "Cool" ஆன மனிதர்.

     அன்று என் விருப்ப வீரரின் "ப்ளோ-அப்" வரும் நன்னாள். வழக்கம் போல் இணைப்பு இல்லை. நானும் என் தங்கையும் இன்று அவரை ஒருகை பார்த்து விடவேண்டும் என்று வாசலிலே உட்கார்ந்து விட்டோம். பேப்பர் விநியோகம் முடிந்து வீடு திரும்பும் அவரை வழிமறித்து சண்டை பிடித்தோம். அவருக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்ன போட்டோ? யாரு போட்டோ? என்று இன்னொரு நாளிதழை எங்களிடம் கொடுத்து வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கூறி சென்றுவிட்டார். அதற்குப் பின் அவரிடம் சண்டைப் போடக் கூடாதென்று கூட்டுத்தீர்மானம் நிறை வேற்றிவிடோம். எங்கள் வீட்டு அலமாரியை  பல கிரிக்கெட் வீரர்களின் ஸ்டிக்கர்கள்  அலங்கரித்த காலம் அது!!!

        கிரிக்கெட் போட்டி நடை பெறும் நாளில் முதல் பாதி ஆட்டம் முடிந்த தருவாயில் தெருக்களில் நடந்த அனுபவம் உங்களுக்கு உண்டென்றால் நான் சொல்லப்போவதை நீங்களும் நன்கு அறிந்திருப்பீர்கள். கூட்டம் கூட்டமாக நின்று பேசும் பள்ளிச் சிறுவர்களையும் அவர்களின் உரையாடல்களையும் நீங்கள் கவனிக்காமல் செல்லவே  முடியாது .

"Full Toss  ball ஆ  போட்டுட்டான்டா, சூப்பரா அடிச்சிருக்கலாம்டா, விட்டுட்டான் Bold ஆயிருச்சு"

"மோசமான பீல்டிங்டா, ஈசி கேட்ச் எல்லாம் விட்டுட்டான், Four, Six  ன்னு வெளுத்துட்டான்".

     தாங்கள் ஏதோ பயிற்சி பெற்ற வீரர்கள் போலவும், பல போட்டிகளில் பங்கேற்றது போலவும் அவர்கள் பேசுவது சுவையாகவே இருக்கும். பேசும் போது அவர்கள் கண்களில் தெரியும் ஆர்வம், கனவிற்கு எல்லையே கிடையாது. போட்டியில் இந்தியா ஜெயித்து விட்டால் நாம் தெருக்களில் நடக்கவே முடியாது ஏனென்றால் அவர்களின் ஆட்டம் தொடங்கிவிடும்.பந்து பல திசைகளில் பறக்கும். பல தாத்தா, பாட்டிகளின் வசவுகளுக்கு உள்ளாவார்கள். தோற்றுவிட்டால் கலை  இழந்த முகங்களுடன், என்ன தவறு செய்தார்கள் என்ற விவாதங்கள் தொடரும். சரியாக விளையாடாத வீரர்களுக்கு ஒரு சில "பட்டங்களும் "  கிடைக்கும். அம்பயர்களும் தப்ப முடியாது.

     சில பல முறை கிரிக்கெட், சூதாட்ட சர்ச்சையில் சிக்கினாலும் அதன் மேல் இருக்கும் மோகம் மட்டும் இன்றும் குறையவில்லை. கிரிக்கெட் சேனல் வாங்க போறேன் என்ற என் கணவரிடம் "நான் எல்லாம் பார்க்க மாட்டேன்", "Interest போயிருச்சு", "வயசாயிருச்சு" என்று வெட்டி ஜம்பம் பேசினாலும்  இந்திய வீரர்கள் நமது வரவேற்பறையில் (டிவி) விளையாடுவதை பார்க்காமல் இருக்க முடியவில்லை. காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ஆனால் உணர்வுகள் என்றும்  மாறுவதில்லை என்பது இதுதானோ?  ஒருவேளை என்னுள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்  அந்தப் பள்ளிப் பெண்தான் என்னைப்   பார்க்கத் தூண்டுகிறாளோ?(!)