Tuesday, August 26, 2025

Playdate WITH பிள்ளையார்!

தமிழகத்தில் முக்கியமாக மதுரை மாநகர தெருக்களில் இரண்டைக் கூட சாலையோர கோவிலில் சஞ்சாரம்  செய்யும் கணேசனின்  கண்காணிப்பின்றி உங்களால் முழுமையாகக் கடக்க முடியாது.

அரசமரம் இருக்கும் இடத்தில் எல்லாம் அவனை அமரச் செய்தார்கள் நம் முன்னோர்கள் ஆனால் நாமோ மரத்தை வெட்டிச் சாய்த்து, கணநாதனை மொட்டை வெயிலில் விட்டுவிட்டு அவனை குளிர்விக்க அருகம்புல்லை தலையில் வைத்துவிடுவதோடு மட்டுமல்லமல்  அப்பாதையை கடக்கும் போதெல்லாம் (அவசர அவசரமாக) தலையில் கொட்டிக் கொண்டு நாம் செய்த, செய்யும் பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடுகிறோம்! 

1970-களின் தொடக்கத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் தென்னந்தோப்பை தன் மகளுக்காக வாங்கினர் என் தந்தை வழி பாட்டியின் பெற்றோர்.

அரை டஜன் குழந்தைகளுடன் நெசவுத் தொழில் செய்து அவதிப்படும் மகளுக்கு அவ்விடத்தில் ஓர் ஒட்டு வீடு ஒன்றை விஸ்தாரமாகக் கட்டிக் கொடுத்தால் அனைவரும் தங்குவதற்கும் கைத்தறி அமைப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று நினைத்தார் பெரியவர்.

அவ்வாறே வீடும் கட்டப்பட்டது ஆனால் அத்தோப்பிற்கு நடுவே ஓர் சிறிய திட்டில் தன் தந்தையுடன் அமர்ந்திருந்தார் பிள்ளையார். அவரை அப்படியே விட்டுவிட்டு தென்னைமரங்கள் சூழ அமைந்திருக்கும் ஒற்றை வீட்டில் வாழ  ஆரம்பித்தனர் அக்குடும்பத்தினர்.

என்னுடைய பாட்டிக்கு கடவுள் பக்தியெல்லாம் கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற கொள்கையை கடை பிடித்தவர் அவர்! தினமும் ஒரு குடம் நீரை கணபதி  மேல் ஊற்றி நீராட்டும் என் தாத்தாவிடம் " சேலை நெய்தால் தான் வயிற்றுக்கு கஞ்சி..நேரைத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கடிந்து கொள்வார் என்று என் பெற்றோர் கூற கேட்டிருக்கிறேன்.

அரசாங்கப் பணியில் இருந்த என் தந்தை அங்கே இங்கே என மாற்றலாகி கடைசியாக எனக்கு 4-5 வயது இருக்கும் போது எங்களின் சொந்த ஊரான மதுரைக்கே வந்து சேர்ந்தார் நாங்களும் அந்த பூர்வீக வீட்டிலேயே வாழத் தொடங்கினோம்.

80-களின் கால கட்டமான இவ்வேளையில் வீட்டைச் சுற்றி இருந்த  தென்னை மரங்களின் எண்ணிக்கை சற்று  குறைய ஆரம்பித்து 4 அறைகள் கொண்ட Line வீடு முளைத்திருந்தது. அங்கு சில குடும்பங்களை வாடகைக்கு அமர்த்தி இருந்தார் என் பாட்டி. அவர்களில் சிலர் பக்திமான்களாக இருக்கப்போய் பிள்ளையார் பிழைத்துக் கொண்டார்.

எங்கள் வீட்டிற்கு எதிர் புறம் காலனி உருவாகி மக்கள் கூட்டம் கணிசமாக உயர்ந்திருந்தாலும் எங்கள் வீடு அன்றும் ரோட்டிற்கு மேல் "ஒற்றை வீடு" என்ற அடையாளத்துடனே விளங்கியது.

திருமணமான புதிதில் எல்லாம் குதிரை வண்டியில் தான் தன் தாய் வீட்டிலிருந்து அங்கு வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் ஓரிரண்டு பேருந்துகள் மட்டுமே அந்த ரூட் (Route)-ல் இருந்ததாகவும் என் அம்மா நினைவு கூறுவார்.

ஆனால் இப்போது (90 காலகட்டம்) குறைந்தது 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டு வாசல் தான் Bus Stop அதனால் பிள்ளையாருக்கு மவுசு சற்று கூடி விட்டிருந்தது. பேருந்து வரும் வரை காத்திருப்பவர்கள், பேருந்தில் இருந்து இறங்கியவர்கள் பய பக்தியுடன்(?!) கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

தென்னை மற்றும் வேப்ப மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கஜமுகனுக்கு ஊதுபத்தி சூடம் ஆரத்தி எல்லாம் கிடையாது. காலை 7 மணிக்கு பால்காரர் கால் டம்ளர் பாலை அபிசேகம் என்ற பேரில் தலையில் கவிழ்த்து விட்டு சென்று விடுவார். ரோட்டில் திரியும் பிராணிகளுக்கெல்லாம் Breakfast கிடைத்த மகிழ்ச்சி. 8 மணி வாக்கில் ஈ எறும்பு மொய்க்கும் பிள்ளையாரை  குளிப்பாட்டுவார் காம்பவுண்டு வீட்டில் இருக்கும் ஓர் நபர். 

ஓர் அகல் விளக்கும் இருக்கும். அவ்வழியே செல்லும் பூக்காரி சிறிது கதம்பத்தை தலையின் மேல் வைக்க என்று எடுப்பார் கைப்பிள்ளை போல் இருந்த அவருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே கொழுக்கட்டை பிரசாதம் படைத்து வழிபடப்படுவார். பின்னாளில் சிவன் ராத்திரி அன்று பொங்கல் வைக்கும் வைபவம் தொடங்கி தொடர்ந்தது.

வெயில் மண்டையை பிளக்கும் மதிய வேளையில் கல் பிள்ளையாரின் குளுமையை நாடி அதன் அருகில் நாய் குடும்பம் குழந்தை குட்டியுடன் தஞ்சமடையும்.  இது போதாதென்று தங்கள் வீட்டு நாய்க்கு பிறந்த குட்டியை எல்லாம் மஞ்சள் பையில் வைத்து பிள்ளையார் அருகில் வைத்து விட்டு சென்று விடுவார்கள்!

எங்களுக்கு 7-8 வயதிருக்கும். கோடை விடுமுறை நாட்களில் மிகவும் போரடித்தால் வாளி நிறைய Water தேங்காய் நார் என்று ஐந்து கரத்தானுக்கு "Spa Day" தான். "போதும் போதும் வாங்க..பிள்ளையார் பளிங்கு சிலையா மாறப்போறாரு" என்று எங்கள் பாட்டி கூப்பிடும் வரை விடமாட்டோம்.

ஊரிலிருந்து வரும் எங்கள் அத்தை குழந்தைகளுடன் கோவிலைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி விளையாட்டு, சாமிக்கு முன் சத்தியம் வாங்குவது, நாங்கள் சமைத்த களி மண் சாப்பாட்டை படைப்பது, சுற்றி இருக்கும் இலை தழை பூக்களை மாலையாகக்  கட்டிப் போடுவது    என்று எங்களின் சேட்டைகளுக்கெல்லாம் ஒரே சாட்சியாக இருந்தவர் இன்றுவரை நாங்கள் அவரிடம் பகிர்ந்து கொண்ட ரகசியங்களை பத்திரமாக கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்.

தொன்னூறுகளில் மரத்தடி பிள்ளையார் எல்லாம் பால் குடிக்க எங்கள் பிள்ளையாரிடமும் மக்கள் தூக்குபோனியில் பாலுடன் நின்றனர்.

2000-த்தின் துவக்கத்தில் தெருவை ஆக்கிரமிக்கும் சிறு கோவில்கள் பல இடிக்கப்பட்டன ஆனால் எங்கள் பிள்ளையார் தப்பினார் அதன் பின் எங்கள் வீட்டிற்கு வெளியே இருக்கும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட ஆபத்து வந்தது எங்கள் வீட்டிற்கும் பிள்ளையாருக்கும் ஆனால் Just Miss-ல் இரண்டும் எஸ்கேப் ஆனது.

நாங்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் அதே வீட்டில் தான் இருந்தோம். வாடகைக்காரர்கள் எல்லாம் அப்போது இல்லை. மினி பஸ் அராஜகம் அதிகரிக்க பிள்ளையார் தூசியில் மூழ்கி இருந்தார். சிறிது தொலைவில் இருந்து ஒரு அக்கா காலையில்  வந்து கோவிலை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து விட்டு செல்வார்.

நாங்கள் எப்போதாவது தான் கும்பிடுவோம் எங்கள் தோழனாகவே இருந்தவனை தெய்வமாக பார்க்கத் தோன்றவில்லையா என்னவோ?!

எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இப்போது அது வசிப்பிடமாக இல்லை. எங்கள் சித்தப்பா மட்டுமே தொழில் நிமித்தம் அவ்வீட்டை பாதுகாத்து வருகிறார். கடந்த 5-6 வருடங்களாக  மாத சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறதாம்.

ஷேர் ஆட்டோ, டவுன் பஸ், டாக்ஸி, டெம்போ வேன் என்று மக்கள் பயணிக்கும் வாகனங்கள் மாறி இருக்கிறதே ஒழிய அந்த ஸ்டாப்பில் இறங்கும் மக்கள் அவருக்கு Attendance போடுவது மாறவில்லை.

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின் இந்த 2025-ம் ஆண்டில் அப்பகுதி மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து கோவிலை புனர் அமைத்திருக்கின்றனர். 

"Make Over" செய்யப்பட்டு ஜம்மென்றிருக்கும்  ஆனைமுகத்தினன் எங்களுள் புதைந்து கிடந்த பற்பல நினைவுகளை பசுமையாக்கிவிட்டு அதே இடத்தில்  அமர்ந்திருக்கிறார்!






Thursday, April 3, 2025

Cruise என்னும் கூத்து

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக  "Cruise Trip" குறித்து நண்பர்கள் பேசிக் கேட்டேன். அது ஏதோ அமெரிக்க குடியுரிமை உள்ளவர்கள் செல்லும் பயணம் நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று பெரிதாக விவரம் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை பின் கொரோனா காலகட்டத்தில் பல சொகுசுக் கப்பல்கள் கரை ஏற முடியாமல் "Port"-ல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததையும் அதில் பயணம் செய்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவதியுற்றதையும் தொலைக்காட்சியில் பார்த்தேன் அவ்வளவே எனக்கும் Cruise க்கும்  உண்டான உறவு!!!

ஆனால் சமீப காலங்களில் நவம்பர், டிசம்பர் என்று குளிர் மாதங்கள்  வந்தாலே "நாங்க Cruise" போறோம் "நீங்க போகலையா?" வாங்களேன் என்று பரவலான அழைப்பு. சிலர் வருடாவருடம் சென்று வருவதாகவும் 'The Best Vacation Ever" என்றும்  கூறுகிறார்கள் சரி அப்படி என்ன தான் இருக்கு இந்த  Cruise-ல்?! ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து இவ்வருட Winter Break-ல்  நண்பர்களுடன் இணைத்து கொண்டோம்.

கப்பல் பயணம் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் பழமையான பயண முறைகளில் ஒன்று. முற்காலங்களில் புதிய நிலப்பரப்புகளையும் வளங்களையும் கண்டறிவதற்கு அரசரின் ஆணைப்படி  பல்வேரு மாலுமிகளின் தலைமைகளின் மேற்கொள்ளப்பட்ட கடற் பயணங்களைக் குறித்து பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம்.

கடல் பயணம் எத்துனை கடினமானது கடற் கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றும் கடல் உயிரினங்களை அதன் கொழுப்பின் (Whale Oil) பொருட்டு வேட்டையாடுவதற்கு சென்று உயிரிழப்பதையும் நாடுகளுக்கு இடையே நடக்கும் கடல் சண்டைகளைக் குறித்தும் ஆங்கிலப் படங்களில் கண்டிருக்கிறோம். புதிய பறவை படத்தில் செல்வந்தர்களாக சிவாஜி சரோஜா தேவி போன்றவர்கள் மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணம் சொகுசுக் கப்பலில் சென்று வருவதாகக் காட்டப்பட்டிருக்கும்  😀😀

19-ம் நூற்றாண்டு மற்றும் 20-ம் நூற்றாண்டின் துவக்க காலங்களிலும் கூட பலர் படிப்பு மற்றும் தொழில் தொடர்பான  வெளிநாட்டு பயணங்களை கடல் வழியே செய்து வந்தனர். 

Cruise என்று சொல்லக்கூடிய இந்த சொகுசுக் கப்பல் பயணங்கள் அமெரிக்காவில் 1970-களில் தொடங்கப்பட்டதாகக் கூகுள் தெரிவிக்கிறது. உயர்வர்க்க மக்கள் மட்டுமே செய்துவந்த இவ்வகை பயணங்கள் தற்போது உலகம் முழுவதும் உள்ள  நடுத்தர வர்கங்களுக்கும் சாத்தியப்பட்டிருப்பது மகிழ்ச்சியே!!!

சரி..நாங்கள் Cruise-க்கு  சென்ற கதைக்கு வருவோம். டிக்கெட் போட்டாச்சு என்றதும் அனுபவசாலிகளிடமிருந்து பல்வேறு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வந்த வண்ணம் இருந்தது. நாங்கள் இதுவரை வேறு எந்த Vacation-க்கும் இவ்வளவு ஷாப்பிங் செய்ததில்லை இத்துனை Luggage-களையும்  சுமந்ததில்லை!! நாம Over ஆ தான் போறோமே?! என்று தோன்றினாலும் "வேணுங்க போட்டோ Shoot இருக்கு Formal Dining இருக்கு, Swimming Pool இருக்கு, Island-ல இறங்கும் போது சுத்திபாக்கணும்" என்று அறிந்தவர்கள் எங்களை ஆசுவாசப்படுத்தினர்.

நாங்களும் ஒருவழியாக மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு 7 நாள் பயணத்தை தொடங்கினோம்.




நாங்கள் எதிர்பார்த்ததை விட Cruise அனுபவம் அருமையாகவே இருந்தது முக்கியமாக குழந்தைகள் நன்கு அனுபவித்து மகிந்தனர் ஆனால் ஒரு இடத்திற்கு போவது அதன் வரலாற்றை தெரிந்து கொள்வது ம்யூசியங்களைப் பார்வை இடுவது என்று சாவகாசமாக எதையும் செய்ய முடியவில்லை சக பயணிகளும் Beach-க்கு செல்வதையே பிரதான நோக்கமாக கொண்டிருந்தனர்.

Cruse ஐ விரும்பும் பலரும் அதற்கு சொல்லும் விளக்கம் "சமையலில் இருந்து சுதந்திரம்  கிடைக்கிறது, எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமாலும் (Restrictions Apply) சாப்பிடலாம், தங்களை அழகாக தயார்படுத்திக் கொண்டு நிகழ்வுகளுக்குச் செல்லலாம், குளிர் காலத்திலும் சூரியனை அனுபவிக்கலாம்  மொத்தத்தில் அழுத்தம் நிறைந்த  Routine Life-ல் இருந்து விடுதலை!!



நிஜமாகவா?! மனிதனால் Routine இல்லாமல் ஒவ்வொரு நாளை ஒவ்வொரு விதமாக செலவழிக்க முடியுமா? Cruise Trip-களில்  வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைகிறோமே தவிர அங்கு தங்கிய 7 நாட்களும் ஒரே Routine ஐ தான் பின்பற்றினோம்.

அனைவரும் சகட்டு மேனிக்கு உணவை வீண் செய்வதைக் காண நேர்ந்தாலும் ஒரு நல்ல விஷயம் குழந்தைகளுக்கு Soda எங்கும் கிடைக்கவில்லை, இன்டர்நெட் இல்லை அதனால் நொடிக்கொரு தரம் போனை நோக்கும் நோயிலிருந்து தற்காலிக நிவாரணம் முக்கியமாக ரீலிஸ்-ல் இருந்து!!



அனைத்து Cruise Ship-களும் Private Island ஒன்றை வாங்கி வைத்துள்ளனர் அதன் முக்கிய நோக்கமே கப்பலில் சேர்ந்த குப்பையையை அங்கு கொட்டுவதற்குத்தான் என்று சொல்கிறார்கள் அதன் அரசியல் என்ன என்று தெரியவில்லை ஆனால் நீலமயமான அதன் அழகை நாங்கள் நன்கு ரசித்தோம்.

24/7 என்று உழைத்து சோர்வடைந்த மனிதர்களுக்கு Cruise Trip ஓகே வீட்லேயே ரிலாக்ஸாய் பொழுது போக்கும்  நமக்கு எதற்கு என்று தோன்றிக்கொண்டே இருந்தாலும் "களவும் கற்று மற"!!!

முடிந்தால் நீங்களும் போயிட்டு வாங்க இப்ப இதுதான் Trending 😂

பின் குறிப்பு - 7 நாளைக்கு தங்க இடமும் குடுத்து, சாப்பாடும் போட்டு அங்கங்க சுத்தி பாக்க இறக்கியும் விடுறானே இவ்வளவு Cheap ஆ எங்கயாச்சும் Vacation போக முடியுமா சொல்லுங்க?! என்று கேட்பவரகளைப் பார்த்தால் அதுவும் சரிதான் என்று தோன்றுகிறது.


Wednesday, February 5, 2025

மழையே.. மழையே

 ஹாஸ்டல் வார்டனைப் போல கறாறுடன் தட்டி எழுப்பிய கைப்பேசி அலாரத்தை snooze செய்யலாமா? Off செய்யலாமா என்று துழவிக் கொண்டிருந்த விரல்களை வெளியில் பெய்து கொண்டிருந்த மழையின் சத்தம் நிறுத்தச் செய்தது.

தூக்கம் அழுத்தும் கண்களுடன் எழுந்த என்னை    மழை மேலும் எரிச்சல் படுத்தியது.

இந்த அமெரிக்காவில் மழைக்கு விவஸ்தையே இல்லை. நேரம் காலம் இல்லாமல் வருடம் முழுதும் நினைத்த நேரத்தில் பெய்கிறது.

குழந்தைகளை குடையுடன் பேருந்து நிறுத்தத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும், குளிர் அதிகமாக இருந்தால் காரிலும் அழைத்துச் செல்லலாம். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை இருந்தும் மழை என்றால் ஒரு ஒவ்வாமை.

இந்த நேரத்தில் மழையில் குத்தாட்டம் போட்டு ice cream ஐ சுவைத்து சாப்பிடும் திரைப்பட கதா நாயகிகள் வேறு தேவை இல்லாமல் நினைவிற்கு வந்து எரியும் கொள்ளியில் எண்ணை வார்க்கிறார்கள்.

என் வாழ்வில் நான் மழையை பெரிதாக ரசித்ததில்லை. ஆரம்ப பள்ளியில் படிக்கும் பொழுது மழை வந்தால் ஜாலியாக இருக்கும் ஏனென்றால் புத்தகப்பையை அங்கேயே வைத்து விட்டு போகச்சொல்லி விடுவார்கள். மழையில் புத்தகங்கள் நனையாமல் இருப்பதற்காக. எங்கள் வீடு பள்ளியில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்திலேயே இருந்தாலும் நானும் பையை வைத்துவிட்டு கையை வீசிக்கொண்டு வந்து  வீட்டுப்பாடம் எழுதாமல் ஆட்டம் போடுவேன் அதிலும் சில ஆசிரியைகள் பேப்பரில் வாய்ப்பாடு எழுதிக் கொண்டு வரச் சொல்லி வெறுப்பேத்துவார்கள்.

ஒரு சில முறை நானும் என் தங்கையும் மழையில் நன்கு நனைந்து அனுபவித்திருக்கிறோம். மழை நீரை வாளியில் பிடித்து வைப்பது போன்ற வேலைகளை ரசித்து செய்திருக்கிறோம்.

நடுநிலைப் பள்ளி காலத்திலிருந்து மழை என்றாலே "அய்யோ பஸ் லேட்டா வருமே, குண்டும் குழியுமான ரோட்டில் சேறு சகதி என்று வழுக்குமே, சில இடங்களில் முட்டி அளவு நீரில் நடந்து செல்ல வேண்டி இருக்கும் முக்கியமாக கரண்ட் கட் செய்து படுத்தி எடுப்பார்கள் அப்படியே மின்சாரம் இருந்தாலும் குளுருது என்று Fan ஐ Off செய்து வீட்டில் உள்ளவர்கள் கடுப்பேத்துவார்கள்  இந்த கொசுக்களோடு மல்லு கட்டமுடியாது" இவ்வாறு மழை என்றதும் மனம் பலவாறாக கவலை கொள்ளத் துவங்கும். புலம்பித தவிக்கும்.

என்னைப் போன்ற சிலருக்கு மழை வேண்டும் ஆனால் யாருடைய பிழைப்பையும் பாதிக்காத விதத்தில் இரவில் மட்டும் அளவோடு பெய்து விட்டு நின்று விட வேண்டும் ஏன் நம்மில் பலரும் வெயில் காலத்தில் மழைக்கு ஏங்குவோம் இரண்டு நாட்களுக்கு தொடர் மழை பெய்து துணி காயவில்லை என்றால் டென்சன் ஆகி அதே மழையை கரித்துக் கொட்டுவோம்.

அமெரிக்காவில் குடித்தனம் பெயர்ந்து வருடங்கள் பல கடந்தோடி விட்டது இங்கு மின்சாரத் தடை எல்லாம் இல்லை, டவுன் பஸ்ஸிற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனினும் திரைப்படங்களில் காண்பிப்பது போல புத்தகத்தை வாசித்துக் கொண்டும் சூடான காபியை சுவைத்துக் கொண்டும் ஒரு பொழுதும் மழையை ரசித்தது கிடையாது மாறாக எனது கணவர்  "சுடச் சுட பஜ்ஜி சாப்பிட்டா இந்த மழைக்கு நல்லா இருக்கும்" என்று சொல்லி என்னை மேலும் சூடேற்றுவார்.

மழைப் பாடல்களை பிடித்த அளவிற்கு மழை ஏனோ எனக்கு பிடிபடாமலேயே சென்று விட்டது.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால் 

நான்அமிழ்தம் என்றுணரற்  பாற்று" 




Sunday, October 20, 2024

தொடுகை

 "தொடுகை" - ஐம்புலன்களில் ஒன்றான தொட்டு உணரும் புலனை நாம் பெரும்பாலான சமயங்களில் பார்வை அற்றவர்களுக்குக்கு மட்டுமே  பயன்படும் ஒன்றாகக் கருதி ஒதுக்கி விடுகிறோம் ஆனால் நம் உணர்ச்சிகளை  (Emotions) க்ஷண நேரத்தில் மற்றவர்களுக்கு அறிவிக்க இதை விட பெரிய உணர்வு ஊட்டி (Sense) வேறு  இருப்பதாகத் தெரியவில்லை.

"ஒருவர் மகிழ்ச்சியான விஷயத்தைக் கூறும் போது "வாழ்த்துக்கள்" என்று கைகுலுக்கும் போதும்  சோகத்தை ஒருவரின் கண்களில் காணும் போது "என்னாச்சு?"  என்று அவரின் தோளில் நம் கை படும் போதும் அழுது கொண்டிருப்பவரை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லும் போதும் கோபத்தில்/ஏமாற்றத்தில்  கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவரை "சரி விடுங்க பாஸ்" என்று முதுகை தட்டும் போதும்" என்று ஆயிரம் வார்த்தைகளால் கடத்த முடியாத Emotions ஐ ஒரு தொடுகை உணர்த்தி விடுகிறது. பல வருடப் பகை கூட பறந்து விடுகிறது.

அப்படி எல்லாம் இல்லை நீங்கள் ஓவரா exaggerate செய்கிறீர்கள் என்று கூறுபவர்களுக்கு...

தாயின் வயிற்றில் இருக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் கருப்பை சுவரை தொட்டுத் தொட்டு பாதுகாப்பாக உணரும் நாம் இந்த பூமியில் பிரவேசம் செய்தவுடன் அந்த தொடுகை இல்லாதது கண்டு பீறிட்டு அழுகிறோம். தன்னோடு அணைத்துக் கொள்ளும் தாயையும் தூக்கத்தில் தூளியையும் தொட்டுக்கொண்டு ஆசுவாசம் அடைகிறோம்.

எழுந்து நடக்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் பெற்றோர்களின் தொடுகை வேண்டும். பின் பள்ளிக்கு செல்லும் போது அடுத்த அழுகை - "வரிசையில எல்லாரும் கையை பிடிச்சிட்டு நில்லுங்க" என்று ஆசிரியர் கூறும் போது அழுகை  நின்று தைரியம் பிறக்கிறது இருந்தும் குறைந்த பட்சம் பத்து வயது வரையாவது பெற்றோர்களின் அரவணைப்பில் இருக்க ஆசைப்படுகிறோம்.

டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பருவ வயதில் நண்பர்களின் கையைப் பிடித்துக் கொண்டும் வகுப்பறையில் தோளோடு தோள் உரசிக் கொண்டு நெருங்கி அமர்ந்து கொண்டும்  Safe ஆக உணர்கிறோம்.

"பின் திருமண வயது - நமக்கென்று பிரத்யேகமாக ஒருவர் வர ஏதோ Celebrity போல உணர்கிறோம்  பின் குழந்தை பிறக்கிறது அதை பிடித்துக் கொள்கிறோம்". வட்டமாக சுற்றி கொண்டிருக்கும் வாழ்க்கையின் இறுதிக்  கட்டமான வயோகதிகத்திற்கு வருகிறோம்.

ஒரு 40 வருடத்திற்கு முன் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக குடும்பமாகவே இருந்தது அதனால் தனது பேரன் பேத்திகளை மடியில் வைத்துக் கொண்டும், பிஞ்சு விரலைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கு அழைத்துச சென்றும், இரவு நேரங்களில் வலியால் அவதியுறும் கால்களை பிடித்து விடும் மகன் மருமகளின் வாஞ்சை என்றும், தோளுக்கு மேல் வளர்ந்து வீட்டை வளைய வரும் பேரப்பிள்ளைகளை தோளோடு அணைத்துக் கொள்வது சமயங்களில் அறிவுரை கூறி தேற்றுவது என்றும்  தொடுகையை  (மனித உணர்வுகளை) உணர்ந்து  கொண்டே இருந்தோம்.

இன்றைய நிலையோ வேறு !! பெரும்பாலான வீடுகளில் வயதானவர்கள் தனிமை வாசம் செய்கிறார்கள். தம்பதிகளாக இருக்கும் பட்சத்தில் சற்று பிழைத்தார்கள் இல்லையேல் ஒரு காய்ச்சல் அடித்தால் கூட தொட்டுப் பார்ப்பதற்கு யாரும் இல்லை அதே நேரத்தில் பெற்றோர்களை மட்டுமே அண்டி  தனியாக வளரும் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch என்று பாடம் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

காலம் மாறி விட்டது அதற்கேற்றாற் போல நாமும் மாறத் தான் வேண்டும். எங்களுக்கும் பிரைவசி தேவை  "Me Time" வேண்டும் என்று வயதானவர்களே கேட்க ஆரம்பித்துவிட்ட பிறகு கூட்டுக்  குடும்பமாகத்தான் வாழ வேண்டும் என்ற பேசிற்கெல்லாம் இடமில்லை ஆனால் பெற்றோர்களின் தேவையை (Materialistic Needs) உணர்ந்து செயல்படும் நாம் குழந்தைகள் போல் மாறி வரும் அவர்களின் Emotions-களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நடக்க சிரமப்படும் இடங்களில் அவர்களின் கைகளை பிடித்து கொள்ளுங்கள் உங்களின் குழந்தைகளை அவர்களின் அருகில் அமரச் செய்யுங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது அவர்களுக்கும் கேக்கை ஊட்டி விடுங்கள். கோயிலுக்கு சென்று விட்டு வந்தால் விபூதியை கையில் தராமல் நெற்றிக்கு இட்டு விடுங்கள் குறைந்த பட்சம் அவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுங்கள்.

மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் விடுமுறையில் செல்லும் அந்த ஓரிரு மாதங்களிலே கூடச் செய்யலாம். உங்கள் குழந்தைகளிடம் பேசி புரிய வையுங்கள். நமது வாழ்கை என்னும் வட்டப் பயணத்தின் தொடுகை அனுபவத்தை  அறுபடாமல் முடித்து வைப்போம் 

Tuesday, May 21, 2024

மாலை நேர மயக்கம்

நேத்து மத்தியானம் மணி 2:55 இருக்கும். உள் ரூமில வேலை பாத்துட்டு இருந்த என் வீட்டுக்காரர் எட்டிப் பாத்து "என்ன மணி மூனாகப்போகுது..டீ போட்றேன்..தலை வலி பின்னுது" என்றார். அப்பதான் சாப்புட்டு உக்காந்த எனக்கு செம்ம கடுப்பு 😠😠

(கொரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்திலும் சிலர்  வீட்ல இருந்து வேலை பாக்குறதால சமைக்குற வேலை ஜாதியாயிருச்சுன்னு பொலம்புறதை சமூக வலைத்தளங்களிலும், அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க சொல்றதையும் கேக்குறேன், பாக்குறேன் ஆனா எனக்கு இந்த டீ போட்டு கொடுக்குறது தான் ஜாஸ்தியாயிடுச்சு!!! விட்டா மதியம் சாப்ட கையோட டீ கேப்பாரு போல 💭) 

"டீ"-ன்னு கேட்டதும் எனக்கும் குடிக்கனும் போல ஆயிருச்சு..சரின்னு டீ-க்கு பாலை வச்சுட்டு "ஆமா..நான் எப்பயிருந்து டீ குடிக்க ஆரம்பிச்சேன்னு" யோசிச்சு பாத்தா..ஞாபகம் ஒன்னும் வரல. ஆனா நான் நாலாவது படிக்கும் போது என் தங்கச்சியோட சேர்ந்து டெலிபோன் பூத் வச்சிருந்த என்னோட தாய்மாமாவுக்கு சாய்ங்காலமா  தூக்கு போனியில டீ  எடுத்துக்கிட்டு போவேன். அது ஞாபகம் வந்திச்சு.

எங்க பாட்டி வீட்ல இருந்து கொஞ்ச தூரமா தான் எங்க மாமா டெலிபோன் பூத் இருந்துச்சு..ரெண்டு மூனு குறுக்கு சந்துல புகுந்து போனா ஈஸியா வந்துரலாம். அப்பல்லாம் ஒரு ரூபா காயின் போன் எல்லாம் இல்லை. கண்ணை எரிக்கிற மஞ்ச கலர்ல பூத் இருக்கும் பெரும்பாலும் உடல் ஊனமுற்றவர்களால நடத்தப்படும். எங்க மாமா கூட போலியோ Attack ஆனவருதான்.

சுடச் சுட தூக்கு போனியில எங்க பாட்டி டீ ஊத்தி குடுப்பாங்க..நாங்க ரெண்டு பேரும் பராக்கு பாத்துகிட்டே, எந்த சந்து வழியா போகலாமுன்னு Argue பண்ணிக்கிட்டு போயி சேர்ரதுக்குள்ளே அது ஆறி போயிருக்கும். சில நேரம் நாங்க ஆட்டுற ஆட்டுல டீ சைடுல எல்லாம் வழிஞ்சிருக்கும். தூக்கு போனி மூடி எல்லாம் கழண்டு விழுந்திருக்கு!!!

ஆனா எங்க மாமா எங்கள கோவிச்சிகிட்டதெல்லாம் கெடையாது. அவரு டீ குடிச்சி முடிகிறவரைக்கும் ஏதாவது ராங் நம்பர் டயல் பண்ணி பேசி டைம் பாஸ் பண்ணுவோம் 😆😆ஒரு தடவை நம்ம காவல் துறை எப்பிடி கடமை தவறாம இருக்காங்கன்னு Check பண்றதுக்கு 100 டயல் பண்ணினோம். ஒருத்தர் எடுத்து D2-வோ, D3 போலீஸ் ஸ்டேஷன்னு சொன்னதும் அலறி அடிச்சிட்டு போனை வச்சுட்டோம். அதுக்கப்புறம் போலீசை பாத்தாலே கொஞ்ச நாள் பம்மி கிட்டு இருந்தோம்.. ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். இப்ப நெனச்சாலும் அதெல்லாம் திரும்ப கெடைக்காது..அந்த Yellow Telephone Booth, தூக்கு போனியில டீ, கவலையற்ற எங்கள் இளமைக்காலம் ..எங்க மாமாவும் தான் 😔 

இப்பிடியே Flashback-ல மூழ்கி இருந்தேனா.. ஏதோ தீஞ்ச வாசனை வந்து மூக்கை தொளைக்குதேன்னு பாத்தா டீ பொங்கி வழிஞ்சிட்டு இருக்கு 😟




Thursday, January 4, 2024

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...

அன்றைய நாள் வழக்கம்போலத் தான் ஆரம்பித்தது எனினும் முடிவு என்னவோ நேர்மாறாகத் தான் இருந்தது!!

சம்பவம் - 1

கல்லூரி துவங்கி முதல் சில மணி நேரத்திற்குள்ளேயே அங்கும் இங்கும் ஒரே சலசலப்பு. "நேத்து போர்ஷனை எடுத்து படிங்க" என்று எங்களுக்கு கட்டளை இட்டு விட்டு Staff Room-ல் பேராசிரியர்கள் ஏதோ தங்களுக்குள் விவாதித்த வண்ணம் இருந்தனர். சமூக வலைத்தளங்களோ, கைபேசிகளோ இல்லாத கற்காலம் அது ஆதலால் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருந்தவர்களுக்கே ஓர் அளவு நாட்டு நடப்பு தெரிய வாய்ப்புண்டு.

நாங்களும் எங்களுக்கு கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக சீரியல் கதை, சினிமாக் கதை பேசியும் நோட்டு புத்தகத்தின் பின் பக்கத்தில் கோலம் வரைந்தும் செலவிட்டுக் கொண்டிருந்தோம்.

மதிய உணவு இடைவெளிக்கு சற்று முன்பே "அன்றைய முதல்வராக இருந்தவருக்கு எதிராகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் அவருக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது" என்றும் "அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம்" என்ற அறிவிப்பு வந்து விட்டது. அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கி சட்ட ஒழுங்கை குலைக்கும் முன் வீடு சென்று சேருமாறு நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம்.

நானும் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு வழக்கமாக செல்லும் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தேன். நிறுத்தத்தை அடைய சில காலடிகளே எஞ்சிருக்கும் நிலையில்  அங்கு காத்துக் கொண்டிருந்த கூட்டம் தீடீரென்று கத்திக் கொண்டு நாலா பக்கமும்  சிதறி ஓடியது. எனக்கு நடப்பது என்னெவென்று புரிவதற்குள் யாரோ "கல்லெடுத்து வீசுறாங்க" என்று கூற யோசிக்காமல் வந்த வழியே திரும்பி கல்லூரியை நோக்கி ஓட்டம் பிடித்தேன்.

மக்கள் அங்கும் இங்கும் பதறி ஓட சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. என் இதயம் வெளியே வந்து விழுந்து விடத் துடிப்பது போல் காதில் படபடத்தது. முதுகில் வேர்வை வழிய நா வறண்டு வாயோடு ஒட்டிக் கொண்டது. 

நான் திருப்பியே பார்க்காமல் சில கைலி கட்டிய ஆசாமிகளின் நடுவே புகுந்து  ஓட்ட நடையில் விரைந்தேன். கடைகளை எல்லாம் இழுத்து மூடிக் கொண்டிருந்தனர். அடுத்த 15-20 நிமிடத்தில் இரண்டு மூன்று பஸ் நிறுத்தங்களைத் தாண்டி வந்து விட்டிருந்தேன். இதற்கு மேல் நடக்க திரணியில்லாமல் பஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன்.

அப்பகுதி சற்று அமைதியாகவே காணப்பட்டது. கலவரம் எந்நேரமும் வெடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர். 

அடுத்த ஒரு மணிநேரத்திற்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டு பேருந்து மாற்றி வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இது என் வாழ்வில் நன் முதல்முதலாக களத்தில் நின்று எதிரே பார்த்த கலவரம்!!

சம்பவம் - 2

அன்று மதியம் ஒரு  மூன்று மணி இருக்கும். படர்ந்திருந்த அமைதியை  திடீரென்று கிழித்துக் கொண்டு  அலறல் ஓசை ஒன்று  சாலையிலிருந்து கேட்க என்னெவென்று எட்டிப் பார்க்கலாமா என்று கதவை நோக்கி செல்வதற்கு முன்னே பக்கத்து போர்ஷனில் இருந்து வெளியே வந்த சித்தப்பா "வெளிய யாரோ ரெண்டு ரவுடிப் பசங்க சண்ட போட்டுட்டு இருகாங்க..கதவ சாத்திட்டு இருங்க" என்று அறிவுறுத்தி விட்டு சென்றார்.

அவர் சென்ற சில நிமிடங்களில் எங்கள் கூரை மீது தட தட வென்று கற்கள் உருளும் சத்தம். ஆர்வம் மேலிட நாங்கள் ஜன்னல் வழியாக நெருக்கி அடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தோம். ரத்தம் சொட்டும் நெற்றியுடன்  ஒருவன் கையில் அரிவாளுடன் இன்னோருவனை துரத்திக் கொண்டிருக்க..அடுத்தவனின் சட்டையிலும் ரத்தக்கறை தெரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கைகளாலேயே தாக்கிக் கொண்டு தெருவில் புரண்டனர். DTS effect இல்லாமல் ஒலித்த அந்த சத்தமே எங்களுக்கு பீதியைக் கொடுத்தது. கதவ தட்டாம இருந்தா சரி என்று கடவுளை வேண்டிக் கொண்டோம்.

என் வாழ்வில் நடந்த இவ்விரு வன்முறை சம்பவங்களையும் நான் எப்போது நினைத்தாலும் ஒரு வித பயம் என்னைத்  தொற்றிக் கொள்ளும்.

வன்முறையை திரையில் காணுகிறோம். நம்மில் சிலர் அதை ரசிக்கிறோம் சிலர் முகத்தை சுளித்துக் கொண்டே கடக்கிறோம் ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவை நம்மை நேரடியாக பாதிப்பதில்லை எனினும்  நடைமுறை வாழ்வில் நம்மால் சிறிய வன்முறையைக் கூட மன அதிர்வின்றி கடந்து செல்ல முடியாது!!!

வன்முறை - திரையில் காணும் போது ஒருவிதமாகவும், உண்மை சம்பவங்களை காதால் கேட்கும் போது ஒரு விதமாகவும், நம் கண் முன்னே நடக்கும் போது, நம் சொந்தங்கள் உறவுகளை பாதிக்கும் போது ஏன் நமக்கே ஏற்படும்  போது என்று வேறு வேறு பாதிப்புகளை நம் மனதில் உருவாக்கும்.



 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இவுலகின்  ஏதோ ஓர் மூலையில் ஏதோ ஓர் யுத்தம் நடந்த வண்ணமே உள்ளது. அவை இரு தேசங்களுக்கிடையே ஆனதாகவோ, உள்நாட்டு போராகவோ, மாவட்டத்திற்கு இடையினிலோ, மதம் சாதி சார்ந்ததாகவோ இருக்கலாம்.

உலகத்தையே தன் உள்ளங்கையில் முடக்கிவிட்ட இந்த இன்டர்நெட் யுகம் நமக்கு அனைத்தையும் நேரடியாக திரையிட்டு காட்டுகிறது நாமும்  "ஐயோ அவங்களை எல்லாம் பார்க்க பாவமா இருக்கு" என்றும் "இவன் பண்ணது தப்பு..அவன் பண்ணது தப்பு" என்று கமெண்ட்  அடித்து விட்டு கனத்த இதயத்தை லேசாக்கிக் கொள்ள சேனலை மாற்றி விடுகிறோம். நம்மால் செய்ய இயல்வதும் அவை மட்டுமே!!!

யுத்தங்களை தவிர்க்க, ஆயுதங்களை கட்டுப்படுத்த, உள் நாட்டு வெளி நாட்டு  பிரச்சனைகளை சுமூகமாக்க என்று எண்ணற்ற சர்வதேச அமைப்புகள் இருந்தும் என்ன பயன்?!

இனி வரும் காலங்களிலாவது போர்க்களம் அற்ற வையம் அமைய வேண்டும். வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!!!

புத்தாண்டு நல் வாழ்துக்கள் 🎕🎕🎕

பின் குறிப்பு - நம்மை பாதிக்காத எதுவும் நமக்கு செய்தியே!!!


Friday, October 13, 2023

பாசமுள்ள "Panda"

2021 கோடை விடுமுறையில் கொரோனா பயம் சற்று குறையத் துவங்கி இருந்தது. எங்கள் ஊரில் இருந்து 600 மைல் தொலைவில் வசித்த நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவதாக முடிவானது. எனது கணவரின் பள்ளித் தோழராக இருந்தவர், பாசத்துடன் பழகும் குணத்தால் எங்கள் சகோதரராக மாறியவர் என்பதாலும் பல மாதங்களாக பெரும் தொற்று காரணமாக எங்கள் வீட்டிற்கு யாரும் வரவில்லை என்பதாலும்  அவர்களின் குடும்பத்தை வரவேற்க நாங்கள் ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருந்தோம்.

அவர்களின் வருகை மனதிற்கு  மகிழ்வைக் கொடுத்தாலும் ஏதோ ஒரு நெருடல் அந்த உவகையை அனுபவிக்க விடாமல் தடுத்தது.

என்ன ஒரே சஸ்பென்ஸ்-ஆ இருக்கேன்னு நினைக்கிறீங்களா?

அது ஒண்ணுமில்லங்க..இந்த கொரோனா கால கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் "Demand" அதிகமானது போல வெளிநாடுகளில்  வேறொன்றின்  மவுசும் அதிகரித்து இருந்தது  அது என்னவென்றால்  "வளர்ப்பு நாய்கள்". தங்களுக்கு நாய் (அதுவும் ஆண் நாய்) வேண்டுமென்று   Breeder-களிடம் இரண்டு மடங்கு  பணத்தைக் முன் பணமாகக்  கொடுத்து விட்டு அவரவர் காத்திருப்பு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு காத்திருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

எங்கள் குடும்ப நண்பரும் அவர் பங்கிற்கு ஒரு நாயை வாங்கி இருந்தார். எட்டு மாதமான அந்த குட்டி நாயும் எங்கள் வீட்டிற்கு வர இருந்தது.

இங்க ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். எங்கள் குடும்பத்திற்கே நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் மீது ஒரு பயம். சிறு வயதிலிருந்தே "புஸு புஸு பொமேரியன் நாயிலிருந்து வாயில் எச்சில் வடிய, நுரை பொங்க குலைத்துத் தள்ளும் டாபர் மேன், நமது கால்களை விடாமல் தனது நாக்கால் துடைத்து நனைக்கும்  Hutch Dog " வரை எதைப் பார்த்தாலும் காத தூரம் பாய்ந்து ஓடுவேன்.

பள்ளியில் படிக்கும் பொழுது நாங்கள் புறநகர் பகுதியில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை யாராவது நாய்க்குட்டியை அங்கு விட்டு விட்டு சென்று விட அது எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்து விடும் அதை விரட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

என் சரித்திரமோ இப்படி இருக்க.. ஒரு வளர்ப்பு நாய் திடீரென்று தனது Leash-ல் இருந்து விடு பட்டு ஓடி வந்து என் மகனை கீழே தள்ளி தலையை நனைத்து விட அவனும் நாய் என்றாலே வெலவெலத்து போகிறான். எனது கணவரும் மகளும் ஓரளவு சமாளிப்பார்கள் என்றாலும் வீட்டிற்கு வரப் போகும் விருந்தாளியை நினைத்து அனைவரும் சற்று கலங்கித்தான் போயிருந்தோம்.

ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. நாங்கள் அனைவரும் வெளியில் சொல்லமுடியாத பதட்டமான மன நிலையுடன் காத்துக் கொண்டிருந்தோம். நாலு கால் பாய்ச்சலில் மூன்றாவது மாடிக்கு வந்த நாய் நல்ல உயரமாக இருந்தது. வந்ததும் வராததுமாக அனைவரையும் நன்றாக நுகர்ந்து தள்ளியது. நான் ரோபோ போல் அசையாமல் நிற்க எனது தோளில் இரு கால்களையும் வைத்து உச்சி முதல் பாதம் வரை Full Body  Scan செய்தது. பயந்து ஓடிய எனது மகனை துரத்தி விளையாடியது. புஸு புஸு வென்ற வெள்ளை ரோமங்களை உடலில் போர்த்தி Teddy Bear போல் தோற்றமளித்த  அதற்கு "Panda" என்று பொருத்தமாக பெயரிட்டிருந்தார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அதனுடைய இருப்பு எங்களுக்கு மெதுவாக பழக ஆரம்பித்தது. அடுத்த அரை நாளில் அதனுடைய நடவடிக்கைகள் ஒரு வித பிணைப்பையும், ஒரு குழந்தையைப் போல அவர்கள் அவனை  நடத்திய விதம் ஒரு அன்யோன்யத்தை அவனிடம் ஏற்படுத்தியது. அவனும் செல்லக்   குழந்தையைப்  போன்றே நடந்து கொண்டான். என் மகன் என் மடியில் அமர்ந்தது கண்டு அவனும் என் மடியில் அமர அடம் பிடித்தான். தன்னைக் கொஞ்சுமாறு கெஞ்சினான். நாங்கள் Pet செய்ய  அத்தனை விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டவன்  அதன் பிறகு  எங்களை தொல்லை செய்யவே இல்லை. எத்தனை புத்திசாலி தனம் பாருங்கள்!!!

இதற்கு முன் பலரும் வளர்ப்பு நாயை குழந்தைக்கு பதிலாக பாசம் காட்டி வளர்ப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன் அப்போதெல்லாம் அவர்கள் மேல் எனக்கு ஒரு வித எரிச்சல் தான் வரும். "குழந்தையும் பிராணியும் ஒன்றா?" என்று கோபம் வரும் ஆனால் இந்த  இரண்டு மூன்று நாட்கள் அவனுடன் பழகியதில் "மன அழுத்தம் குறைய நாயை வளர்ப்பதில் தப்பில்லை" என்று தோன்றியதோடு "தனிமையைப் போக்க தக்க துணை நாய்களைத் தவிர வேறில்லை" என்றும்  பட்டது.

ஒரு மனிதனைப் போலவே அனைத்து உணர்ச்சிகளையும் "பாண்டா" காட்டியதும்  நமது உணர்வுகளை உள்வாங்கி அதைப்  பிரதிபலித்ததும் வியப்பாகவே இருந்தது. அதனை வெளியே விட்டு அறையின் கதவை உள் பக்கமாக மூடிக் கொண்டால் சத்தமில்லாமல் வெளியில் அமர்ந்து  அழுதது. நாங்கள் சாப்பிட அமர்ந்தால் அதற்கும் வேண்டும் என்று செல்லமாக அடம் செய்தது. பந்தைப் பார்த்தால் துள்ளிக் குதித்தது. அனைவரும் தொலைக்காட்சியில் படம் பார்த்தால் ஒரு ஓரமாக படுத்து உறங்கியது. எங்களை அறியாமலேயே நாங்களும் அவனை விரும்பத் துவங்கினோம்.

"Panda" சென்ற பின் இரண்டு நாட்களுக்கு அவன் நினைப்பாகவே இருந்தது. யாரோ நான்கு காலில் நடந்து வருவது போன்ற பிரம்மை ஏற்பட்டது. "எங்க..போற போக்கை பார்த்தா நீயும் நாய் வளர்க்க ஆரம்பிச்சிருவ போல?!" என்று என் கணவர் கேலி செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவ்வளவு பாசத்தை கொட்டிக்  குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்படும் செல்ல நாய்கள் அதிக பட்சம் பத்து வருடங்கள் தான் நம்முடன் இருக்கும் என்றால் அதன் பிரிவை என்னால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை!!!

பிராணிகளின் வதைகளை கண்டிக்கும் சமூக  ஆர்வலர்கள் கூட வளர்ப்பு நாய்களின் தேவைகளுக்காகவும், குறிப்பிட்ட  இன நாய்கள் அதிகமாக விரும்பப்படுவதாலும்  நாய்கள் கட்டாய இனப்பெருக்கத்திற்கு உந்தப் படுவதை அத்தனை வலுவாக கண்டிப்பதாக தெரியவில்லை. எது எப்படியோ கொரோனாவின் தயவால் செல்லப் பிராணிகளை பெருக்கும் (Breeding) தொழிலில் கல்லா கட்டுகிறார்கள் என்பது மட்டும் உண்மை.